தமிழகம்

நுங்கம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடக்கம்

செய்திப்பிரிவு

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், நுங்கம்பாக்கம் பகுதியில் சுரங்க கட்டுமானத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்3 வழித்தடங்களில் 118.9 கி.மீ.தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களில் சுரங்கம், உயர்மட்டப் பாதைக்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தற்போது சுமார் 42 இடங்களில் பணிகள் நடக்கின்றன.

இந்த 3 வழித்தடங்களில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் (45.8 கி.மீ.) முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்த வழித்தடத்தில் 19.1 கி.மீ. தொலைவுக்கு உயர்மட்டத்திலும், 26.7 கி.மீ. தொலைவுக்கும் சுரங்கத்திலும் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இந்நிலையில், நுங்கம்பாக்கம் பகுதியில் சுரங்க கட்டுமானத்துக்கான ஆரம்பகட்ட பணிகள்தொடங்கியுள்ளன. ஸ்டெர்லிங் சாலை - கல்லூரி சாலையில் மெட்ரோ ரயில் சுரங்கப் பணிக்காக, தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை ஆகிய 2 இடங்களில் சுரங்க ரயில் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில்நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

நுங்கம்பாக்கம் பகுதியில் மட்டும் தடுப்புகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. ஸ்டெர்லிங் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் சுரங்க ரயில் நிலையம் அமையவுள்ளது. அடுத்த ஆண்டு கட்டுமானப்பணி தொடங்க வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ஒப்பந்தம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னையில் தற்போது வரை22 பகுதிகளில் தடுப்புகள் அமைத்து, மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் குறைந்த வேகத்தில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் காலை, மாலையில் நெரிசல் மிகுந்த வேளைகளில் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT