அரிய வகை முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவுக்கு தண்டலம் தனியார் மருத்துவமனையில் முக சீரமைப்பு அறுவை சிகிச்சை சுமார் 9 மணி நேரம், வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
திருவள்ளூர் மாவட்டம்- ஆவடி வீராபுரம் பகுதியை சேர்ந்தவர் டானியா(9). வீராபுரம் அரசு பள்ளி 4-ம் வகுப்பு மாணவியான இவர், கடந்த ஆறு ஆண்டுகளாக அரிய வகை முக சிதைவு நோயால் அவதியுற்று வந்தார்.
சிறுமி டானியாவுக்கு முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்ய ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி, நேற்று காலை அமைச்சர் சா.மு.நாசர் அறுவை சிகிச்சை செய்ய அவரை அறுவை சிகிச்சை அரங்கத்துக்கு வழி அனுப்பி வைத்தார். அங்கு, சுமார் 10 மருத்துவ நிபுணர்கள் மூலம் டானியாவுக்கு முக சீரமைப்பு அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இந்த அறுவை சிகிச்சை காலை 8 மணி முதல், மாலை 5 மணிவரை, சுமார் 9 மணி நேரம் நடைபெற்றது. வெற்றிகரமாக நடந்த முடிந்த இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் உள்ள சிறுமி டானியா, தற்போது குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவக் குழுவினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு, மருத்துவமனைக்கு வந்த பால்வளத் துறை அமைச்சர், அறுவை சிகிச்சை மற்றும் சிறுமியின் உடல் நலம் குறித்து, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
முக சீரமைப்பு அறுவை சிகிச்சைமூலம் தனது மகளின் முகம் முன்புஇருந்தது போல் அழகாக மாறப்போவதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது சிறுமியின் பெற்றோர் தெரிவித்தனர்.
சிறுமியின் தாய் செளபாக்யா, சிறுமியின் அறுவை சிகிச்சை தொடர்பாக தன்னை அலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வரிடம் தன் நன்றியை தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுமி டானியா, தான் பூரண குணமடைந்த உடன், முதல்வரை நேரில் சந்தித்து நன்றிசொல்ல வேண்டும் என, தெரிவித்ததாக அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.