தமிழகம்

வீடு புகுந்து பெண்ணை கொன்று 26 பவுன் நகை கொள்ளை

செய்திப்பிரிவு

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து, 26 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றவர்களை திருப்பூர் போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

திருப்பூர் வீரபாண்டி இடுவம் பாளையம் குட்டைத் தோட்டத் தைச் சேர்ந்தவர் பாலாமணி(60). இவரது கணவர் ராமசாமி இறந்துவிட்டார். மகன் மற்றும் மகளுடன் பாலாமணி வசித்து வந்தார். அப்பகுதியில் 25-க்கும் மேற்பட்ட வீடுகளை அவர் வாடகைக்கு விட்டுள்ளார்.

தீபாவளியன்று மகன் மற்றும் மகள் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். வீட்டில் பாலாமணி மட்டும் தனியாக இருந்துள்ளார். நேற்று காலை தோட்ட வேலைக்காக வந்த தொழிலாளி, வீட்டின் உள்ளே பாலாமணி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு வீரபாண்டி போலீஸாருக்கு தகவல் அளித்தார். அங்கு சென்ற போலீஸார் பாலாமணியின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர்.

வீட்டில் இருந்த 26 பவுன் நகை திருடப்பட்டிருந்ததாக பாலாமணியின் மருமகள் சுதா போலீஸாரிடம் அளித்த புகாரில் தெரிவித்திருந்தார். வீட்டின் வெளியே வைக்கப்பட்டிருந்த 8 கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து வீரபாண்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT