வேலூரில் மருத்துவர் வீட்டில் திருடி கைதான சகோதரர்கள் இருவரும் 3 தலைமுறைகளுக்கு முன்பு ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் சுவாரிஸ்ய தகவல் தெரியவந்துள்ளது.
வேலூர் வேலப்பாடி பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் வீட்டில் இருந்து 22.5 பவுன் தங்க நகைகள், ரூ.15 லட்சம் ரொக்கப் பணம் திருடிய வழக்கில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மொய்தீன் (33), ஷாஜகான் (28) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்கள் இருவரும் சகோதரர்கள்.
இவர்கள் சிக்கியது எப்படி என காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘மருத்துவர் வீட்டில் திருடியவர்கள் அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணி வரை வீட்டில் இருந்துள்ளனர். அதன் பிறகே காரில் புறப்பட்டுள்ளனர். இது அந்தப் பகுதியில் உள்ள சிலரது வீட்டு கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகயிருந்தன.
அதில் காரின் பதிவெண் தெரியாத நிலையில் நகரில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது கொணவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்க்குக்கு வந்து சென்றது தெரியவந்தது.
அந்த பங்க்கில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், மீனப்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பழைய மாடல் கார் என தெரியவந்தது. பதிவெண் அடிப்படையில் பெட்ரோல் வகையைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கார்களின் விவரங்களை சேகரித்து விசாரணை செய்யப்பட்டது.
அதில் திருட்டு வழக்கில் தொடர்புடைய கார் ஏற்கெனவே 5 பேரிடம் கை மாறி இருப்பதும் கடைசியாக ஓ.எல்.எக்ஸ் மூலம் விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்தது. அந்த காரை வாங்கியது தருமபுரியைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த முகவரியில், அவர்கள் இல்லாத நிலையில் அவர்களின் செல்போன் எண்ணை வைத்து விசாரித்தோம்.
அவர்கள், ஆற்காட்டில் கடந்த 6 மாதங்களாக வசித்து வருவதும் அவர்கள் ஏற்கெனவே, 20-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்கில் தொடர்புடைய சகோதரர்கள் என்பதை தருமபுரி காவல் துறையினர் மூலம் உறுதி செய்தோம். கடைசியாக ஈரோட்டில் திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளதும் தெரியவந்தது.
மேலும், 87 வயதான இவர்களின் தந்தையும் பிரபல திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளி என்பதும் மூன்று தலைமுறைக்கு முன்பு ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. ஜமீன் பரம்பரையில் கிடைத்த நகைகளை வைத்து செலவு செய்தவர்கள் அடுத்தடுத்த தலைமுறைக்கு பணம் இல்லாத நிலையில் திருட்டு தொழிலுக்கு வந்ததும் தெரியவந்தது.
வேலூரில் மருத்துவர் வீட்டில் திருட்டுக்கு பயன்படுத்திய காருக்கான பாஸ்ட்-டேக் எண் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஆற்காட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு வேலூருக்கு தினசரி வந்து பூட்டிய வீடுகளை காலை மற்றும் இரவு நேரங்களில் நோட்டமிட்டுள்ளனர்.
இரண்டு நாள் தொடர்ந்து வீடு பூட்டியிருந்ததால் அந்த வீட்டில் திருடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அதன்படிதான் மருத்துவர் வீட்டிலும் திருடியுள்ளனர். இவர்கள் இருவரும் சத்துவாச்சாரியில் உள்ள வேறு ஒரு டாக்டர் வீட்டிலும் அமெரிக்க டாலர் நோட்டுகளை திருடியது தெரியவந்தது. இந்த வழக்கில் சுமார் ஒரு மாதமாக இடைவிடாமல் கண்காணித்து விசாரணை செய்த பிறகே சகோதரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்’’ என்றனர்.