தமிழகம்

காஞ்சிபுரம் அருகே லாரி மோதி 3 பேர் பலி: வெவ்வேறு இடங்களில் மேலும் 4 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

களக்காட்டூர் அருகே உள்ள களக்காட்டூரைச் சேர்ந்த மணிகண்டன். இவர் தனது நண்பர்கள் மிலிட்டரி ரோட்டைச் ரமேஷ்பாபு, நாகராஜன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூரை நோக்கி சென்றார். அப்போது களக்காட்டூர் அருகே சாலையை கடக்கும்போது, உத்திரமேரூரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற லாரி ஒன்று, அவர்கள் மீது மோதியது.

இதில், படுகாயமடைந்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் சடலங்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆட்டோ மோதி பலி

ஒழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணமித்ரன்(65). இவர் ஆலப்பாக்கம் பகுதியில் சாலையைக் கடக்கும்போது அந்த வழியாக வந்த ஆட்டோ மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக செங்கல்பட்டு போலீஸார் விசாரிக்கின்றனர்.

உத்தரமேரூர் வட்டம் பொற்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி(64). இவர், நெல்வாய் கூட்டுச் சாலையில் இருந்து மாத்தூர் நோக்கி டிராக்டரில் சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலயே இறந்தார். சாலவாக்கம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

செங்கல்பட்டு பூங்கேரி பகுதியைச் சேர்ந்தவர் ஞானக்கண்ணன்(31). இவர் மோட்டார் சைக்கிளில் மாம்பாக்கத்தில் இருந்து காயார் நோக்கிச் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயார் போலீஸார் விசாரிக்கின்றனர்.

சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ் பிரபாகர்(56). இவர் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் முதலியார்குப்பம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தபோது, சார்லஸ் பக்கிங்காம் கால்வாயில் விழுந்துள்ளார்.

அவரை மீட்க முடியாததால், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மீட்கும் முயற்சி நடைபெற்றது. இதில் சார்லஸ் சடலமாக மீட்கப்பட்டார். செய்யூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மூதாட்டி பலி

வில்லியம்பாக்கத்தைச் சேர்ந்த ஜோதீஸ்வரி(70) என்ற மூதாட்டியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

பாலூர் போலீஸார் வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே மூதாட்டி இறந்த நிலையில் கிடந்தார். பாலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT