சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில்உட்பட தமிழகம் முழுவதும் 86 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிப்பது தொடர்பான மாநில அளவிலான வல்லுநர் குழுகூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், துறை இணை ஆணையர் (திருப்பணிகள்) பொன்.ஜெயராமன், ஆகம வல்லுநர் குழு உறுப்பினர் கோவிந்தராஜ பட்டர், ஆனந்த சயன பட்டாச்சாரியார் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி சிதம்பரேஸ்வரர், திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் சொரிமுத்து அய்யனார், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருவாரூர் - கீழமணலி லட்சுமி நரசிம்மர், திருப்பூர் - காங்கயம் பெரியநாயகி அம்மன், கரூர் - புலியூர் வரதராஜப் பெருமாள் கோயில் உட்பட 86 கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவது குறித்து இக்கூட்டத்தில் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. வல்லுநர்குழு பரிந்துரையின் அடிப்படையில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, இக்கோயில்களில் விரைவில் திருப்பணிகள் தொடங்கப்படும். தமிழகத்தில் இதுவரை 1,000-க்கும்மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.