தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 20-ம் தேதி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''வரும் நவம்பர் 19- தேதி தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக சார்பில் இங்கு போட்டியிட விரும்புவோர் வரும் 20-ம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்குள் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விருப்ப மனு அளித்தவர்களிடம் வரும் 21-ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெறும். விண்ணப்ப படிவங்களை ரூ. 1,000 செலுத்தி தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் ரூ. 25 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.