அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி ஆகியோர் மீண்டும் போட்டியிடுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் இரு வாரத்துக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த எஸ்.ராஜேந்திரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது:
தமிழகத்தில் கடந்த மே மாதம் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடந்தது. அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியும், திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியும் ஜனநாயக முறைப்படி முறையாக தேர்தலை சந்திக்காமல் பணத்தை வாரி யிறைத்தனர். தேர்தல் ஆணைய விதிமுறைகளை மதிக்கவில்லை.
வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வைத்திருந்த கோடிக் கணக்கான பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதிமுகவைச் சேர்ந்த கரூர் அன்புநாதன் வீட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.4 கோடியே 77 லட்சம் மற்றும் ஒரு கோடியே 30 லட்சம் மதிப் பிலான வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேப் போல திமுக வேட்பாளர் பழனிச் சாமி மற்றும் அவருடைய மகன் வீட்டில் இருந்தும் ரூ.ஒரு கோடியே 95 லட்சம் பறிமுதல் செய் யப்பட்டது. தவிர 500 லிட்டர் மது பானமும் பறிமுதல் செய்யப் பட்டது. இதனால் இந்தத் தொகு தியில் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்த தொகுதிக்கு நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது மீண்டும் இந்த தொகுதியில் அதிமுக சார்பில் செந்தில் பாலாஜியும், திமுக சார்பில் கே.சி.பழனிச்சாமியும் போட்டியிட உள்ளனர். இந்த தொகு தியில் ஏற்கெனவே தேர்தல் தள்ளிப்போவதற்கும், ரத்து செய்யப்படுவதற்கும் இவர்கள் 2 பேரும்தான் மூலகாரணம்.
மறுபடியும் இவர்களையே போட்டியிட அனுமதித்தால் அது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விடும். ஆகவே அவர்கள் தாக்கல் செய்யும் வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும். அவர்களுக்கு அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சின்னங்களை ஒதுக்கக்கூடாது. இவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதி பதியைக் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘‘ஏற்கெனவே அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கு, வரும் நவம்பர் 9-ம் தேதி இதே அமர்வில் விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்குடன், இந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதற்கு முன்பாக இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி ஆகியோர் இரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.