தமிழகம்

‘மூலிகை பெட்ரோல்’ மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

செய்திப்பிரிவு

மூலிகை பெட்ரோல் மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை பெருநகர கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மூலிகை மூலம் பெட்ரோல் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்துள்ளதாக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமர் பிள்ளை 1999-2000-ம் ஆண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தியா முழுவதிலும் இச்செய்தி பெரும் விவாதத்தை கிளப்பியது. மேலும், மூலிகை மூலம் பெட்ரோல் தயாரிக்க முடியுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. தனது கண்டுபிடிப்பை எந்த அதிகாரிகள் முன்னிலையிலும் செய்து காட்டி நிரூபணம் செய்யத் தயார் என்று ராமர் பிள்ளை அப்போது அறிவித்தார். ஆனால், அதை அறிவியலாளர்கள் நம்ப மறுத்தனர். மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அறவே இல்லை எனவும் அறிவியலாளர்கள் தெரிவித்தனர்.

அதன்பின்னர், ராமர் பிள்ளை தனது கண்டுபிடிப்பை ‘ராமர் பெட்ரோல்’ ‘ராமர் தமிழ்தேவி மூலிகை எரிபொருள்’ என்ற பெயர்களில் விற்பனை செய்தார். அதற்காக சென்னை, புறநகர் பகுதிகளில் 11 விற்பனை நிலையங்களையும் தொடங்கினார். முன்பணம் பெற்றுக் கொண்டு விற்பனை ஏஜென்ட்களை நியமித்தார். ஆனால், அவர் விற்பனை செய்த எரிபொருள் ஐஎஸ்ஐ தரத்தில் இல்லை என்பது தெரியவந்தது.

பின்னர், தவறான தகவல்களை கூறி எரிபொருளை விற்பனை செய்து ரூ.2.27 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் ரசாயனம் கலந்து பெட்ரோல் விற்பனை செய்து வருகிறார் என்றும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்தப் புகாரை விசாரித்த சிபிஐ, ராமர் பிள்ளையை கைது செய்தது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த சென்னை பெருநகர கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘‘மோசடி வழக்கில் கைதான ராமர் பிள்ளை, ஆர்.வேணுதேவி, எஸ்.சின்னசாமி, ஆர்.ராஜசேகரன், எஸ்.கே.பரத் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6,000 அபராதமும் விதிக்கப்படுகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT