தீபாவளி நேரத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளதால் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் விநியோகிப்பதை தடுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக தேர்தல் ஆணையமும், காவல்துறையும், தொகுதி முழுவதும் தற்காலிக சோதனைச் சாவடிகள், ரகசிய கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்தியுள்ளனர். பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு திமுக ஆட்சியில் திருமங்கலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு திமுக, அதிமுக கட்சிகள் அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. இடைத்தேர்தலுக்கு தனி பார்முலாவையே உருவாக்கிய மோசமான வரலாறை திருமங்கலம் இடைத்தேர்தல் ஏற்படுத்தியது.
அதன்பின் நடந்த ஒவ்வொரு இடைத்தேர்தல்களிலும் திமுக, அதிமுக கட்சிகளும் இதுபோல் பணம், பரிசுப்பொருட்கள் விநியோகம் செய்வதும், மக்களும் அதை எதிர்பார்ப்பதுமாக இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகள் திருவிழா கோலம் பூண்டிருக்கும்.
தற்போது திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு முன், அக்.29-ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. அதனால், பண்டிகையையொட்டி இந்த தொகுதிகளில் வாக்காளர்களுக்கு முக்கிய அரசியல் கட்சிகள், பரிசுப்பொருட்கள், பணம் விநியோகம் செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதைத் தடுக்க, திருப்பரங்குன்றம் தொகுதியில் 21 சோதனைச் சாவடிகள், 18 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் சென்றால், அதை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட, மாநகர, மாநில காவல்துறையினர் நுண்ணறிவுப்பிரிவு போலீஸார், தனிப்பிரிவு போலீஸார், உளவுத்துறை போலீஸார் உதவியுடன் அரசியல் கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகளை கண்காணித்து உடனுக்குடன் தகவல்களை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் மற்றும் அதிகாரிகள் நேற்று திருப்பரங்குன்றத்தில் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். அப்போது சோதனைச் சாவடியில் நடைபெறும் வாகனச் சோதனையை ஆட்சியர் பார்வையிட்டார்.
பரிசுப்பொருட்கள், மது பாட்டில்கள், பணம் வாகனங்களில் வந்தால் உடனே அவற்றை கைப்பற்றி, ஒப்படைக்கவும், குடியிருப்பு பகுதிகளில் அரசியல் கட்சியினர் சந்தேகத்துக்கிடமான வகையில் வீடு வீடாகச் சென்று பரிசுப்பொருள், டோக்கன் வழங்கினால் அவற்றை தடுக்கவும் போலீஸார், அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
தொகுதியில் இருக்கும் அனைத்து கிராமங்கள், குடியிருப்புகளையும் தீபாவளி முடியும்வரை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் தங்கள் முழு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள்
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பணப்பட்டுவாடா புகார் காரணமாகவே, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதனால், அதுபோன்ற மோசமான வரலாறு மீண்டும் நடைபெறாமல் இருக்கவும், பணம், பரிசுப்பொருட்கள் வாங்காமல் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றவும் சிறப்பு விழிப்புணர்வு முகாம்களை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.