சென்னை உயர் நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை அதிரடியாக ரத்து செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கின்றது என்று அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றம், திமுக அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் பாரதி தொடுத்த வழக்கில் தேர்தலை அதிரடியாக ரத்து செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கின்றது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை ரத்து செய்துவிட்டு சுழற்சி முறையைப் பின்பற்றி முறையாக இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதையும் மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கின்றது.
உரிய அவகாசம் வழங்காமல் அவசர கதியில் ஆளும் அதிமுகவிற்கு உதவும் வகையில் மாநிலத் தேர்தல் ஆணையத்தினால் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. மனம்போன போக்கில் ஒதுக்கீடு முறை செயல்படுத்தப்பட்டிருந்தது.
உதாரணமாக சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளர் பெண் என்றும், திருச்சி மாநகராட்சி வேட்பாளர் ஆண் என்றும் அறிவிக்கப்பட்டு பிறகு சென்னைக்கு ஆண் மேயர் வேட்பாளர் எனவும், திருச்சிக்கு பெண் மேயர் வேட்பாளர் எனவும் மாற்றப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக அரசின் கைப்பாவையாக மாநிலத் தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளதை அம்பலப்படுத்தியுள்ளது. ஜனநாயகத்தின் ஆணிவேறாக இருக்கும் உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஆளும் அதிமுக அரசு தனது மனம்போன போக்கில் நடத்த போட்டிருந்த திட்டத்தையும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு முறியடித்துள்ளது.
எனவே, தமிழக அரசு இந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலை தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உரிய முறையில் பின்பற்றி போதிய அவகாசத்துடன் கூடிய அட்டவணையுடன் மீண்டும் தேர்தலை அறிவிக்க வேண்டும்'' என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.