தமிழகம்

சென்னை | வழக்கு பதியாமல் இருக்க ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்ட விவகாரம்: பெண் காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு நகைக்கடையின் மேலாளராக இருப்பவர் சிவகுமார் (54). இவர்கடந்த 11-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்மனு ஒன்றை அளித்திருந்தார்.

அதில், ‘‘சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு காவலர்கள் மெல்வின், தங்கராஜ் ஆகிய 2 பேர் கடந்த 10-ம் தேதி எங்கள் கடைக்கு வந்தனர். நகை திருட்டு வழக்கில் நேபாளத்தை சேர்ந்த பெண் ஒருவரை கைது செய்திருப்பதாகவும், அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகையில் உங்கள் கடையின் முத்திரை இருப்பதாகவும் கூறி விசாரணைக்கு அழைத்தனர்.

அதன்பேரில், நான் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் சென்றேன். அப்போது இந்த வழக்கில் உங்கள் கடையின் பெயரை சேர்க்காமல் இருக்க ஆய்வாளர் ரோகிணிக்கு ரூ.1.50 லட்சம், எங்கள் 2 பேருக்கும் சேர்த்து ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டினர்’’ என்று கூறி இருந்தார்.

மேலும், புகார் மனுவுடன் காவலர்கள் கடைக்கு வந்து சென்ற சிசிடிவி கேமரா பதிவு, தொலைபேசி உரையாடல் பதிவு ஆகியவற்றையும் அவர் இணைத்து அளித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டை ஆய்வாளர் ரோகிணி மறுத்திருந்தார். அதே வேளையில் இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

விசாரணையில் ஆய்வாளர் ரோகிணி, காவலர்கள் மெல்வின், தங்கராஜ் ரூ.2 லட்சம் கேட்டது உறுதியானது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். காவல் ஆணையர் சங்கர் ஜிவால்உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

பின்னர், நகைக்கடை மேலாளரை மிரட்டிய விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நுங்கம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் ரோகிணி கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT