திருக்கழுகுன்றம்: திருக்கழுகுன்றத்தை அடுத்த மேட்டு கருமாரப்பாக்கம் பகுதியில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி அமைப்பு சார்பில் பல்வேறு பகுதிகளில் வழிபாடு செய்வதற்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
கரோனா பரவல் குறைவு காரணமாக அரசு சார்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது 10 அடி உயரம்கொண்ட சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட உள்ளது. இதற்காக, செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றத்தை அடுத்த மேட்டு கருமாரப்பாக்கம் கிராமத்தில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இதில், சிங்கம், புலி, பசுமாடு, தாமரை பூ, எலி மற்றும் யானை உள்ளிட்ட வாகனங்களின் மீது விநாயகர் அமர்ந்துள்ள வகையில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
மேலும், பொது இடங்களில் 10 அடி உயரத்துக்கு மேல் சிலை அமைக்கக் கூடாது என்ற அரசின் விதிகளைப் பின்பற்றி குறைந்த உயரம் கொண்ட 100-க்கும் மேற்பட்ட சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இங்கு, தயாரிக்கப்பட்டு வரும் விநாயகர் சிலைகள் கோவளம், மாமல்லபுரம், திருக்கழுகுன்றம், மதுராந்தகம், கூவத்தூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.