சென்னை: சென்னையில் மாநகராட்சி சார்பில் 2,666 விதிமீறல்கள் கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மாதவரத்தில் திட்ட அனுமதி இன்றி செயல்பட்ட கிறிஸ்தவ சபைக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். அதற்கு கிறிஸ்தவ பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதி பெறுபவர்கள் கட்டிட மற்றும் திட்ட அனுமதியில் குறிப்பிட்டுள்ளவாறு அளவு மற்றும் விவரக் குறிப்பின் அடிப்படையில் தான் கட்டிடங்களை கட்ட வேண்டும்.
அனுமதியில் குறிப்பிடாத, அனுமதியே பெறாத விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் கண்டறியப்பட்டு கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். தகுந்த விவரங்கள் மற்றும் போதிய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் தொடர்புடைய கட்டிடத்தை மூடி சீல் வைக்க நோட்டீஸ் வழங்கப்பட்டு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பிறகு மாநகராட்சி அலுவலர்களால் சீல் வைக்கப்படும்.
அதனடிப்படையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் கடந்த ஜூலை 25 முதல் ஆக.20 வரை தொடர்புடைய உதவிப் பொறியாளர்கள் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அனுமதிக்கு புறம்பாக விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள மற்றும் கட்டிட அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள 2,666 கட்டுமான இடங்களின் உரிமையாளர்களுக்கு கட்டுமான பணிகளை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விதிமீறல்களை திருத்திக்கொள்ளாத 2,403 கட்டிட உரிமையாளர்களுக்கு தொடர்புடைய கட்டுமான இடத்தை பூட்டி சீல் வைக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 39 கட்டிடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட 27-வது வார்டு கே.கே.தாழை பகுதியில் செயல்பட்டு வரும் கிறிஸ்தவ சபை, திட்ட அனுமதி பெறாமல் இருந்ததால், உரிய அவகாசம் வழங்கியும் திட்ட அனுமதி பெறாத நிலையில், நேற்று மாநகராட்சி அதிகாரிகள் கிறிஸ்தவ சபைக்கு சீல் வைத்தனர்.
மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு கிறிஸ்தவ பெண்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு, அங்கிருந்த பெண்கள் வெளியேற்றப்பட்டனர்.