தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் மின்கட்டணம் உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் ஆணையத்தின் தலைவர் சந்திரசேகர், ஆணைய உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் ஆணைய செயலர் வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தனி நபர், கட்சிகள், விவசாயிகள், தொழில் நிறுவனங்கள் சார்பில் பலர் கலந்து கொண்டனர். படம்: ம.பிரபு 
தமிழகம்

மின்கட்டணத்தை உயர்த்தினால் தொழில் நிறுவனங்கள், மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்: சென்னையில் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: மின்கட்டணத்தை உயர்த்துவது குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சென்னையில் நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மின்கட்டணத்தை உயர்த்தினால் தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று பலரும் தெரிவித்துள்ளனர்.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக மின்வாரியம் மின்கட்டணத்தை உயர்த்த உத்தேசித்துள்ளது. இதற்கு அனுமதி கோரிதமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைத்திடம் மனு சமர்ப்பித்துள்ளது. இதையடுத்து, கட்டண உயர்வு தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்து, கடந்த 16-ம் தேதி கோவையிலும், 18-ம் தேதி மதுரையிலும் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியது.

91 பேர் கருத்து தெரிவிப்பு

இந்நிலையில், சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைத்தின் தலைவர் சந்திரசேகர், உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 91 பேர் தங்கள் கருத்துகளை தெரிவித்து பேசினர். அதன் விவரம்:

வேளச்சேரி அண்ணா நகர் குடியிருப்போர் சங்க நிர்வாகி ஆறுமுகம்: மாதம்தோறும் மீட்டர்கணக்கெடுப்பு முறையை அமல்படுத்த வேண்டும். வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக் கூடாது.மின்கட்டண விவரங்களை சாதாரண மக்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே, அதை எளிமையாக்க வேண்டும்.

வடசென்னை சிறு, குறு தொழில் முனைவோர் சங்கத்தின் செயலாளர் ஜோதி: மின்கட்டணத்தை உயர்த்தினால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நலிவடையும். எனவே, மின்கட்டணத்தை உயர்த்தக் கூடாது.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த நெசவாளர் குப்பன்: ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் போதிய அளவுமின்சாரம் விநியோகம் செய்யப்படாததால், நெசவுத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ரூ.1.5 கோடி முதல் ரூ.2.5 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தட்டச்சு பயிற்சிப் பள்ளி நடத்தும் சுப்பராமன்: தட்டச்சு பயிற்சிப் பள்ளியை வர்த்தக நிறுவனமாக கருதி வர்த்தக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தட்டச்சுக் கல்விஎன்பது சேவைப் பிரிவில் வருவதால், வீடுகளுக்கான கட்டணத்தையே தட்டச்சு பயிற்சிப் பள்ளிகளுக்கும் நிர்ணயிக்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம்: மின்கட்டணத்தை உயர்த்தினால் சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களும் கடும் சிரமத்துக்கு ஆளாவார்கள். 100 யூனிட் இலவச மின்சாரத்தை தாமாக முன்வந்து விட்டுக்கொடுக்கும் திட்டத்தை அமல்படுத்துவது, மக்கள் அனுபவித்துக் கொண்டு இருக்கும் சலுகையை பறிக்கும் நடவடிக்கை.

சென்னை மீன்பிடி துறைமுக ஐஸ் கட்டி உற்பத்தியாளர் நலச் சங்க செயலாளர் சந்திரசேகரன்: கடல்சார் உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கான ஐஸ் கட்டிகளை தயாரிக்கும் குறைந்த மின்னழுத்த, உயர்மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கு நிலைக் கட்டணம், நெரிசல் நேர கட்டணம் நிர்ணயம் செய்யக் கூடாது. ஐஸ் கட்டி தொழிற்சாலைகளுக்கு தனி மின்கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச்செயலாளர் செல்வா: மின்கட்டணஉயர்வு குறித்து பொதுமக்களுக்கு புரியும் வகையில் தெளிவாக விளக்க வேண்டும். மின்கட்டணத்தை ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்த்தும் திட்டத்தையும் அரசு ரத்து செய்ய வேண்டும்.

பாஜக தொழில் துறை பிரிவுமாநிலத் தலைவர் பா.கோவர்த்தனன்: கரோனா தொற்றுக்கு பிறகுபெரும் பிரச்சினைகளில் இருந்து மீண்டு வரும் சிறு, குறு தொழில்களை நசுக்கி சீரழிக்கும் நடவடிக்கையாக மின்கட்டண உயர்வு அமைந்துள்ளது.

தமிழ்நாடு சிறு, குறுந்தொழில்கள் சங்க பொதுச் செயலாளர் நித்தியானந்தன்: கடன் பிரச்சினையால் கடந்த 2020-21-ம் ஆண்டில் 30 ஆயிரம் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. வரும் 2022-23-ம் ஆண்டில் மேலும் 40 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட உள்ளன. கடன் சுமையால் நிறுவனங்கள் தவித்து வரும் நிலையில், மின்கட்டண உயர்வை 2 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி: ஆண்டுக்கு 6 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும். மின்கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்கள் வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடும்.

காக்களூர் தொழிற்பேட்டை சங்க நிர்வாகி பாஸ்கர்: சூரியஒளி மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்

SCROLL FOR NEXT