‘கியாந்த்’ புயல் வலுவிழந்து மத்திய மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:
சில நாட்களுக்கு முன்பு மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து புயலாக மாறியது. இதற்கு ‘கியாந்த்’ என பெயரிடப்பட்டது. இந்தப் புயல் திசை மாறி மத்திய மேற்கு வங்கக் கடலுக்கு நகர்ந்தது. நேற்று இப்புயல் வலுவிழந்து அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்தது. இதன் காரணமாக தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
இருப்பினும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் உள்தமிழகத் தில் இன்று ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.
நாளை 29-ம் தேதி வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத் தில் சில இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதி களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப் பிருக்கிறது. இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.