மாடித் தோட்டம் அமைப்பதற்காக ரூ.500 மதிப்புடைய விதை, உரம் உள்ளிட்ட பொருட்கள் ரூ.300-க்கு வழங்கப்படும் என தோட்டக்கலை துறை தெரிவித்துள்ளது.
நகர்ப்புறங்களில் தோட்டக் கலையை வளர்க்கும் நோக்கில் தமிழக அரசு கடந்த 2013-14-ம் ஆண்டில் சென்னையில் முதன்முறையாக மாடித் தோட்டம் அமைக்கும் திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்துக்கு பொதுமக்களிடம் கிடைத்த வரவேற்பை அடுத்து ‘நீங்களே செய்து பாருங்கள்’ என்ற திட்டம் சென்னையுடன் கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், தமிழக அரசு தோட்டக்கலை துறை இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
தொடக்கத்தில் ரூ.1,350 மதிப்புடைய காய்கறி ‘கிட்’ வழங்கப்பட்டது. பின்னர் அதன் விலை ரூ.500 ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில், இத்திட்டம் ‘மாடித் தோட்ட இயக்கம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இது குறித்து, தமிழக அரசு தோட்டக்கலை துறை அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
மாடித் தோட்டம் திட்டம் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் தொடங்கப்பட் டது. இதற்கு கிடைத்த வரவேற்பையடுத்து தமிழகம் முழுவதும் விரைவில் விரிவு படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், ரூ.500 மதிப்புடைய காய்கறி ‘கிட்’ வழங்கப்படும். 40 சதவீத மானியத்துடன் இவை வழங்கப்படுவதால் பொதுமக்கள் ரூ.300 செலுத்தினால் போதும். இந்த ‘கிட்’டில் 2 கிலோ எடையுள்ள கேக் வடிவிலான தேங்காய் நார் கழிவுகள் 6 பைகள், கத்தரி, வெண்டை, தக்காளி உள்ளிட்ட 10 வகையான காய்கறி விதைகள், 200 கிராம் அசோஸ்பையி ரில்லம் (நுண்ணுயிர் உரம்), 200 கிராம் பாஸ்போ பாக்டீரியா உரம், தலா 100 கிராம் எடை கொண்ட சூடோமோனஸ், டிரைகோடெர்மா விரிடி உரங்கள், ஒரு கிலோ நீரில் கரையும் உரங்கள், 100 மில்லி வேம்பு பூச்சிக் கொல்லி, தொழில்நுட்பக் குறிப்புகள் அடங்கிய பிரசுரம் ஆகியவை இடம் பெற்றிருக்கும். ஒருவருக்கு அதிகபட்சமாக 5 தளைகள் வரை வழங்கப்படும்.
மேலும், விருப்பமுள்ளவர்கள் 10 சதுர மீட்டர் பரப்பளவில் மாடியில் நிழல் வலைக் குடில் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படும். இதன்படி, ரூ.7 ஆயிரத்து 100 மதிப்புள்ள இந்த நிழல்வலைக் குடில் ரூ.3 ஆயிரத்து 550-க்கு கிடைக்கும். இத் திட்டத்தின் கீழ் மானியம் பெற பொது மக்கள் தங்களது வீட்டின் சொத்துவரி நகல், வாடகைதாரர் ஒப்பந்த நகல், குடும்ப அட்டை, ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதிகாரி கூறினார்.