தமிழகம்

திருமாவளவனுடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு: அரசியல் பேசவில்லை என இருவரும் விளக்கம்

செய்திப்பிரிவு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று திடீரென சந்தித்துப் பேசினார்.

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத் துக்கு நேற்று பகல் 1 மணியளவில் பொன்.ராதாகிருஷ்ணன் வந்தார். அவரை திருமாவளவன் வரவேற் றார். இருவரும் சுமார் 20 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

இந்தச் சந்திப்பு குறித்து ‘தி இந்து’விடம் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியதாவது:

அசோக்நகரில் உள்ள பாஜக நிர்வாகி முரளியின் வீட்டுக்கு சென்றேன். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அலுவலகம் அருகில் இருப்பதாகவும், அங்கு திருமாவளவன் இருப்பதாகவும் தெரிவித்தனர். எனவே, அவரை நேரில் சென்று சந்தித்தேன்.

திருமாவளவனும் நானும் 25 ஆண்டு கால நண்பர்கள். அரசியலுக்கு அப்பாற்பட்டு அண் ணன் - தம்பிகளாக பழகி வரு கிறோம். தமிழன் என்ற முறை யிலும், அண்ணன் - தம்பி என்ற முறையிலும் அவரைச் சந்தித்தேன். பொதுவான அரசியல் விஷயங் களை இருவரும் பேசிக் கொண் டிருந்தோம். 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், காவிரிப் பிரச் சினை, தேர்தல் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமாவளவனிடம் கேட்ட போது, ‘‘எங்கள் கட்சியின் அலுவலகம் அருகே ஒரு நிகழ்ச்சிக்கு வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் என்னை சந்தித்தார். இது முழுக்க முழுக்க நட்பு ரீதியான சந்திப்பு. அரசியல் எதுவும் இல்லை’’ என்றார்.

கடந்த 13-ம் தேதி டெல்லியில் பாஜக கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான், இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும் மத்திய இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே ஆகியோரை திருமாவளவன் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, அவர் பாஜக பக்கம் சாய்வதாக விமர்சனங்கள் எழுந்தன.

இதற்கு விளக்கம் அளித்த திருமாவளவன், ‘‘நவம்பர் 12-ம் தேதி சென்னையில் நடைபெற வுள்ள தேசிய தலித் முன்னணி மாநாட்டுக்கு அழைக்கவே தலித் தலைவர்களான மத்திய அமைச்சர்களை சந்தித்தேன். எனது அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்’’ என தெரிவித்திருந்தார். இந்நிலையில், மக்கள் நலக் கூட்டணியின் முக்கியத் தலைவரான திருமா வளவனை பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சந்தித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரோக்கியமானது

இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரிடம் கேட்ட போது, ‘‘திருமாவளவன் - பொன்.ராதாகிருஷ்ணன் இருவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு நட்பு ரீதியாக சந்தித்துள்ளனர். அரசியல் ரீதியாக எதிரெதிராக இருந்தாலும் இதுபோன்ற சந்திப்புகள் ஆரோக்கியமானது, வரவேற்கத்தக்கது. இதற்கு உள் நோக்கம் கற்பிப்பது சரியல்ல’’ என்றார்.

SCROLL FOR NEXT