மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தலைமை ஆசிரியர் தாக்கியதில் படுகாயமடைந்த மாணவர் ஒருவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உசிலம்பட்டி அருகேயுள்ள எழுமலையை அடுத்த தடையம்பட்டி அரசு கள்ளர் சீரமைப்பு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 11-ம் தேதி போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பள்ளி சார்பில் வைக்கப்பட்ட பெட்டியில் போதைப் பொருள் பயன்படுத்தும் மாணவர்கள் குறித்து புகார் எழுதிப் போடலாம் என அறிவுறுத்தப்பட்டது.
இதில் 9-ம் வகுப்பு மாணவர் ஒருவர் மட்டும் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டு பெட்டியில் புகார் ஏதும் எழுதிப் போடவில்லை. இதனால், தலைமை ஆசிரியர் பிரபு (45) அந்த மாணவரை கம்பால் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், காயமடைந்த அந்த மாணவருக்கு உசிலம்பட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவருக்கு முழங்கால் பகுதியில் ரத்தம் உறைதல் ஏற்பட்டு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. மேலும், மாணவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மாணவரின் தந்தை மணிகண்டன் எழுமலை போலீஸில் புகார் செய்தார். இதன்பேரில் தலைமை ஆசிரியர் பிரபு மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.