செங்கல்பட்டு மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக, தாம்பரம் வட்டம் சிட்லபாக்கத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும், பணிபுரியும் பெண்கள் தங்கும் விடுதி பணிகளை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு செய்தார். உடன் ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள்.படம்:எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

செங்கை மாவட்டம் கூடுவாஞ்சேரி, சிட்லபாக்கம் பகுதிகளில் பணிபுரியும் மகளிர் விடுதிகள் கட்டுமான பணி: இறையன்பு ஆய்வு

செய்திப்பிரிவு

வண்டலூர்: செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி, சிட்லபாக்கம் பகுதியில் ரூ.20.44 கோடியில் பணிபுரியும் மகளிர் விடுதிகள் கட்டுமான பணிகளை தமிழக தலைமை செயலாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பணி புரியும் பெண்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. இதில் பணிபுரியும் பெண்கள் தங்குவதற்காக ரூ.6 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் 122 படுக்கைகளுடன் கூடிய 5 தளங்கள் கொண்ட வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இதனை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நடைபெற்று வரும் பணிகள், விடுதியில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து விளக்கப்பட்டன.

மாணவிகளிடம் கலந்துரையாடல்

இதேபோல் சிட்லபாக்கம் பகுதியில் ரூ.14 கோடி மதிப்பில் 466 படுக்கைகள் கொண்ட பெண்கள் தங்கும் விடுதி கட்டுமான பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். மேலும் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

இதில் நீதித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் முருகானந்தம், குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை செயலாளர் அருண் ராய், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல் நாத், செங்கல்பட்டு அரசு பணிபுரியும் மகளிர் விடுதி கழக தலைமை செயல் அலுவலர் மாலதி ஹெலன், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், செங்கல்பட்டு சார் ஆட்சியர் சஞ்சீவனா, மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா, தமிழ்நாடு காவல் வீட்டுவசதி கழக தலைமை பொறியாளர் ஜெயக்குமார், வண்டலூர் வட்டாட்சியர் பாலாஜி, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையர் இளம்பரிதி உள்ளிட்ட ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழக தலைமை செயலாளரிடம் நடைபெற்று வரும் பணிகள், விடுதியில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து விளக்கப்பட்டன.

SCROLL FOR NEXT