சென்னை: மாநில அரசு கொண்டு வந்த பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட ட்விட்டர்பதிவு: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தை, மாநிலஅரசே மேற்கொள்ளும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் மறுத்துள்ளார்.
குஜராத், தெலங்கானா மாநிலங்களில் துணைவேந்தர் நியமனத்தை மாநில அரசுகளே மேற்கொள்கின்றன. அங்கு பல்கலைக்கழக மாநிலக் குழு (யுஜிசி) விதிமுறைகளின்படி நியமனங்கள் நடக்கின்றன. அதையே தமிழகத்திலும் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது.
ஆனால், மசோதா நிறைவேறினால், அரசியல் தலையீடு வந்துவிடும் என ஆளுநர் தெரிவித்துள்ளார். மாநில பல்கலைக்கழகத்தில் ஜனநாயக விரோதமான அரசியலை புகுத்துவதே ஆளுநர்தான். உயர் கல்வி நிறுவனங்களை ஆர்எஸ்எஸ் கூடாரமாக்கவும், மாநில அரசின் கொள்கைக்கு மாறாக புதிய கல்விக் கொள்கையை திணிக்கவும் தொடர்ந்து முயற்சிக்கிறார்.
எனவே, ஆளுநர் தனது நாடகத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். தேர்ந்தெடுகப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தை குறுக்கு வழியில் பறிக்க முயற்சிக்கும் மத்திய ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறோம். மாநில அரசின் சட்டத்துக்கு உடனே அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.