சென்னையில் நேற்று மாலைமுதல் திடீரென பெய்த அடை மழை. இடம்: டி.ஜி.பி அலுவலகம் அருகே உள்ள சாலை. படம்: ம.பிரபு 
தமிழகம்

சென்னை, புறநகரில் இடி, மின்னலுடன் திடீர் மழை: இரவு முழுவதும் குளிர்ந்த சூழல் நிலவியது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய திடீர் மழை பெய்தது. இதனால் இரவு முழுவதும் குளிர்ந்த சூழல் நிலவியது.

கடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. ஆனால்சென்னை, புறநகர் பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வந்தது. பகல் நேரத்தில் கடும் புழுக்கம்நிலவினாலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று காலைமுதல் கடும் வெயில் நிலவியது. மாலையில் சூரியன் மறைந்த பிறகும் புழுக்கம் நிலவியது.

இந்நிலையில் மாலை புறநகர் பகுதிகளில் மழை தொடங்கியது. பின்னர் இரவு சுமார் 8 மணிஅளவில் சென்னை மாநகரப் பகுதியில் வானம் இடி, மின்னலுடன் காணப்பட்டது. பின்னர் தீடீரென மழை பெய்யத் தொடங்கியது.

குறிப்பாக சென்னையில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, அடையார், கோட்டூர்புரம், பட்டினப்பாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம், வேப்பேரி, புளியந்தோப்பு, வியாசர்பாடி, பெரம்பூர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

புறநகர் பகுதிகளான மதுரவாயல், பூந்தமல்லி, ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. திடீர் மழையால் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, வால்டாக்ஸ் சாலை போன்றவற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

SCROLL FOR NEXT