தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆட்சியர் கி.செந்தில் ராஜ் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 ஊராட்சிகளில் 1,761 கிராமங்களில் 'நம்ம ஊரு சூப்பரு' என்ற சிறப்பு சுகாதார முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமின்போது கிராமங்களில் உள்ள பொது இடங்கள், நீர் நிலைகளை தூய்மைப்படுத்த வேண்டும்.
அனைத்து துறை அலுவலர்களும் தங்கள் துறைக்கு சொந்தமான கட்டிட பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும். அங்கன்வாடிகள், பள்ளிகள், கல்லூரிகளை சுத்தமாக வைத்து சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும்.
ஊட்டச்சத்து தோட்டம்
சுத்தமான குடிநீர் வழங்குதல் மற்றும் திட, திரவ கழிவு மேலாண்மை தொடர்பாக பணிகள் மேற்கொள்ளவேண்டும். அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளும் ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க வேண்டும்.
அதன்படி 27.8.2022 முதல் 2.9.2022 வரை அனைத்து பொது இடங்களிலும் ஒட்டுமொத்த துப்புரவு முகாம் நடத்தப்படும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 3.9.2022 முதல் 16.9.2022 வரை சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் வீடுதோறும் சுகாதாரம், தனிநபர் கழிப்பறை பயன்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
17.9.2022 முதல் 23.9.2022 வரை ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும், பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை முழுமையாக அமல் படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 24.9.2022 முதல் 1.10.2022 வரை தேவைப்படும் பொது இடங்களிலும், தனிநபர் வீடுகளிலும் மரக்கன்றுகள் நடப்படும்.
இந்த பணிகள் மூலம் 2.10.2022 அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் ‘நம்ம ஊரு சூப்பரு' என மக்கள் கூறும் அளவு க்கு கிராமங்களை தூய்மைப்படுத்த வேண்டும் என்றார்.