எலும்பு மஜ்ஜை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வழியின்றி தவித்த இரண்டரை வயது ஏழைச் சிறுமிக்கு ஆந்திராவைச் சேர்ந்த தம்பதி ரூ.5 லட்சம் வரை திரட்டி வழங்கி ஆதரவு அளித்துள்ளனர்.
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் சின்னக்காரியாப்பட்டியைச் சேர்ந்த வர் கார்த்திக். இவரது மனைவி நந்தகுமாரி. கூலித் தொழிலா ளர்கள். இவர்களின் ஒரே மகள் தக்சிதாவுக்கு இரண்டரை வயது ஆகிறது. மூன்று மாத கைக்குழந்தையாக இருந்தபோது தக்சிதாவின் உடலில் ரத்தம் ஊறுவதில் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது. இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண தக்சிதாவுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும், அதற்கு ரூ.20 லட்சம் வரை செலவாகும் என தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக கடந்த செப்.8-ம் தேதி ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் தக்சிதா பெயரில் உதவி கோரி விளம்பரம் வெளியானது. இந்த விளம்பரத்தை பார்த்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மதுரை மண்டல அலுவலகத்தில் உதவி மேலாளர்களாக பணிபுரியும் ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த பி.சூர்யகிரண்(28), அவரது மனைவி சுவாதி(26) ஆகியோர் அக்குழந்தைக்கு உதவ முன்வந்தனர். தக்சிதாவின் சிகிச்சைக்கு உடனடியாக ரூ.2 ஆயிரம் அனுப்பியதுடன் நின்றுவிடாமல், பெருமளவில் நிதி திரட்டி வழங்கவும் முடிவு செய்தனர்.
முன்னதாக, சின்னக்காரி யாப்பட்டிக்கு நேரில் சென்று தக்சிதாவின் பெற்றோரைச் சந்தித்து பேசினர். அதன்பின், சிறுமிக்குச் சிகிச்சை அளித்த மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர் காசிவிஸ்வநாதனையும் சந்தித்தனர். அவர், தக்சிதாவைப் பாதித்துள்ள நோய், அதற்கான சிகிச்சை, செலவு குறித்து விளக்கினார். இதை அத் தம்பதியினர் வீடியோவில் பதிவு செய்து வாட்ஸ்அப், முகநூலில் பதிவேற்றம் செய்தனர்.
‘ஹெல்பிங் ஹேன்ட்ஸ், கைன்ட் ஹார்ட்’ என்ற பெயரில் தனி வாட்ஸ்அப் குழுவை ஏற்படுத்தி ஹைதராபாத், அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் நண்பர்களையும் உறுப்பினர்களாக சேர்த்தனர். நண்பர்கள் அனைவரும் தாராளமாக பண உதவி செய்தனர். சூர்யகிரணின் அரிய முயற்சியால் தக்சிதாவின் சிகிச்சைக்கு இதுவரை ரூ.5 லட்சம் வரை சேர்ந்துள்ளது. இதில் ரூ.3 லட்சம் தக்சிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை கணக்கில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளது. எஞ்சிய ரூ.2 லட்சம் ஓரிரு நாளில் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து சூர்யகிரண் கூறியதாவது:
தக்சிதா எனது உறவினர் அல்ல. நானும் அவரும் ஒரே பூமியில் பிறந்தவர்கள். எங்கள் இருவரின் இடையே இந்த உறவு மட்டுமே. சிறிய வயதிலேயே உலகை விட்டு போய்விட வேண்டும் என்ற ஆசையில் தக்சிதா பிறக்கவில்லை. அவரை நோயின் பிடியில் இருந்து காப்பாற்றுவது நம் ஒவ்வொருவருடைய கடமை.
தக்சிதா எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு மற்றவர்களைப்போல நலமுடன் வாழ்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அவருக்குத் தேவையான எலும்பு மஜ்ஜையை தானமாக வழங்குவதற்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் தயாராக உள்ளனர். தக்சிதாவின் சிகிச்சைக்காக எனது நண்பர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பண உதவி வழங்கி வருகின்றனர். தங்களால் சமூகத்தில் சிறிய அளவில் மாற்றம் ஏற்பட்டால் போதும் என்ற திருப்தியால் உதவி செய்ய முன்வருகின்றனர் என்றார்.
ஒரே நாளில் ரேஷன் கார்டு
சூர்யகிரண் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிவதால் முதல்வரின் ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டம் மூலம் தக்சிதாவின் சிகிச்சைக்கு உதவ முடிவு செய்துள்ளார். ஆனால், தக்சிதாவின் தந்தை முதல்வரின் ஒருங்கிணைந்த காப்பீட்டுத் திட்டத்தில் கார்டு பெறவில்லை. அந்த கார்டு பெற தேவையான மூல ஆதாரமான ரேஷன் கார்டும் அவர்களிடம் இல்லை.
இதுகுறித்து சூர்யகிரண் தனக்கு தெரிந்த குமரி மாவட்ட ஆட்சியரிடம் உதவி கோரியுள்ளார். குமரி ஆட்சியர் திண்டுக்கல் ஆட்சியரிடம் பேச, தக்சிதாவின் தந்தைக்கு ஒரே நாளில் ரேஷன் கார்டு வழங்கப்படடது. மறுநாள் முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டு அட்டையும் வழங்கப்பட்டது. முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தக்சிதா ரூ.1.50 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும்.