சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா படுக்கையில் இருந்து எழுந்து உட்கார முடியும் நிலையில் உள்ளதாகவும், சைகையில் பேசுவதாகவும் 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி கிடைத்துள்ளது.
கடந்த செப்டம்பர் 22-ம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடுகள் காரணமாக முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆயிரம்விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின்னர் மருத்துவமனை அடுத்தடுத்து வெளியிட்ட மருத்துவ செய்திக் குறிப்புகளில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. கடந்த 10-ம் தேதிக்குப் பின்னர் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தொடர்பாக இதுவரை எவ்வித அறிக்கையும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா படுக்கையில் இருந்து எழுந்து உட்காருவதாகவும், சைகையில் பேசுவதாகவும் 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி கிடைத்துள்ளது.
முதல்வர் தொடர்ந்து செயற்கை சுவாச உதவியுடன் இருப்பதாலேயே சைகையில் பேசுவதாகவும், டிராக்கியாஸ்டோமி குழாய் அகற்றப்பட்ட பின்னர் அவரால் வழக்கம்போல் பேசமுடியும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும், பகல் நேரங்களில் அவருக்கு தூக்க மருந்துகள் வழங்கப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலும் கிடைத்துள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் நுரையீரலில் இருந்த நீர்த்தேக்கம் வெற்றிகரமாக சீர் செய்யப்பட்டிருப்பதால் பகல் நேரங்களில் தூக்க மருந்துகள் வழங்குவது நிறுத்தப்பட்டிருக்கிறது.
எழுந்து உட்கார்ந்து, சைகையில் பேசுவதால் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் ஒரு மாதத்துக்குப் பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையில், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியல் வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.