ஆதம்பாக்கத்தில் டிப்பர் லாரி மோதியதில் எலக்ட்ரீஷியன் உயிரிழந்தார். அடிக்கடி விபத்துகள் நடப்பதை தடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம் அருகே பள்ளிக்கரணை விவேகனந்தர் தெருவைச் சேர்ந்தவர் மோகன் (40). எலக்ட்ரீஷியன். நேற்று காலை ஆதம்பாக்கத்துக்கு வேலை நிமித்தமாக வந்தார். பாலகிருஷ்ணபுரம் தெரு வழியாக, கக்கன் நகர் பிரதான சாலையை கடக்க முயன்றபோது திரி சூலத்தில் இருந்து கிண்டிக்குச் சென்ற டிப்பர் லாரி மோதியதில் அதே இடத்தி லேயே அவர் உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் திரிசூலத்தைச் சேர்ந்த அசோக் மற்றும் கிளீனர் தப்பி ஓடிவிட்டனர்.
ஹெல்மேட் அணிந்திருந்த நிலையிலும் மோகன் உயிரிழந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் ஏராளமானோர் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த ஆதம்பாக்கம் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி கலையச் செய்தனர். இந்த விபத்து தொடர்பாக பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, ‘இந்த சாலையில் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே இந்த சாலையில் முக்கிய இடங்களில் வேகத் தடை அமைக்க வேண்டும். மேலும்
சாலை ஓரத்தில் குடிநீர் பணிக்காக போடப்பட்ட பெரிய குழாய்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை அப்புறப்படுத்த வேண்டும்’ என்றனர்.
தொழிலாளி பலி
திருவாரூர் மாவட்டம் மண்ணார்குடி அடுத்த மேலபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அமர்நாத் (19). இவர் ஒரகடம் பகுதியில் தங்கி எறையூர் பகுதியில் உள்ள கார் உதிரிபாக தொழிற்சாலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கழிவுநீரில் வாயு வெளியேறியதில் மூச்சு திணறி மயங்கி விழுந்துள்ளார். சிகிச்சைக் காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவ மனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிந்தார். இதுகுறித்து ஒரகடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.