சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 4 அப்பாவிக் குழந்தைகளின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 4 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும் துயரமும் அடைந்தேன். உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் அதே நேரத்தில் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் பாதிக்கப்படுவதும், அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது. சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று இரவு உயிரிழந்த 4 குழந்தைகளில் இருவர் காஞ்சிபுரம் மாவட்டத்தையும், இருவர் திருவள்ளூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
தமிழகத்தின் தலைசிறந்த குழந்தைகள் மருத்துவமனை என்று போற்றப்படும் எழும்பூர் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த 4 குழந்தைகள் 6 மணி நேர இடைவெளியில் உயிரிழந்திருப்பது அக்குழந்தைகளுக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படவில்லை என்பதையே காட்டுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு என்ன நோய் என்பதைக் கண்டறிந்து அதற்கு உரிய மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஆனால், உயிரிழந்த 4 குழந்தைகளுக்கும் என்ன நோய் என்பதே கண்டறியப்படவில்லை.
கடைசிவரை குழந்தைகளுக்கு மர்மக் காய்ச்சல் என்று தான் குழந்தைகளின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து பெற்றோருக்கு தெரிவிக்காததுடன், உரிய மருத்துவமும் அளிக்காத மருத்துவமனையின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. நோய் உருவாவதை தடுப்பதும், உருவான நோயை கட்டுப்படுத்துவதும் சுகாதாரத் துறையின் இரு முக்கிய பணிகளாக இருக்க வேண்டும். ஆனால், இந்த இரு கடமைகளிலும் தமிழக சுகாதாரத் துறை தோல்வியடைந்து விட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இரு மாதங்களுக்கு முன் டெங்கு காய்ச்சல் தாக்கியது. அதைத் தொடர்ந்து சென்னையிலும் டெங்கு காய்ச்சல் பரவியது. இந்த நோய்க்கு இரு மாவட்டங்களிலும் 11 பேர் உயிரிழந்தனர். அப்போதே டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், சுகாதாரத்துறை செயலாளரும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு பதிலாக, முதல்வர் மருத்துவம் பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனையிலேயே முகாமிட்டிருப்பதன் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. இவ்வாறு தமிழக ஆட்சியாளர்களும், மாவட்ட, மாநகர நிர்வாகமும் அலட்சியம் காட்டியதன் விளைவாக 4 அப்பாவிக் குழந்தைகளின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
இனிவரும் நாட்களில் டெங்கு காய்ச்சலுக்கு எவரும் உயிரிழக்காத அளவுக்கு நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளை உருவாக்க வேண்டும். எழும்பூர் மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.