ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை தேசிய புலனாய்வுப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலத்தில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக 6 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் நெல்லையில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவில் பிடிபட்ட நபர்கள் அளித்த தகவலின்படி இன்று அதிகாலை 4.30 மணியளவில் கடயநல்லூரில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த கே.சுபஹனியை (31) கைது செய்தனர். அங்கிருந்து ரகசிய இடத்துக்கு கொண்டு சென்றனர்.
சுபஹனி பின்னணி:
சுபஹனி பின்னணி என அதிகார மட்டத்தில் இருந்து தெரிய வருவது:
சுபஹனியின் தந்தை காதர் மொய்தீன் கடையநல்லூரைச் சேர்ந்தவர். இவர் பல ஆண்டுகளுக்கு முன்னரே குடும்பத்துடன் கொல்லம் சென்றுவிட்டார்.
இந்நிலையில் சுபஹனி வேலை தேடி சில மாதங்களுக்கு முன்னர் தொடுபுழா சென்றுளார். அங்குதான் அவருக்கு ஐ.எஸ். இயக்கத்துடன் ஏற்கெனவே தொடர்பில் 6 பேருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அங்கேயே ஒரு நகைக்கடையிலும் வேலை செய்து வந்தார். இந்நிலையில்தான் அவரை தேசிய புலனாய்வுப் படையினர் கைது செய்துள்ளனர்.
கைதான 6 சந்தேக நபர்கள்:
கேரள மாநிலம் கன்னூரைச் சேர்ந்த ஒமர் என்ற மன்ஷீத் (30), கோவையைச் சேர்ந்த அபு பஷீர் என்ற ரஷீது (29), திருச்சூரைச் சேர்ந்த ஸ்வாலி முகமது என்ற யூசுப் (26), மலப்புரத்தைச் சேர்ந்த சப்வான் (30), கோழிக்கோட்டைச் சேர்ந்த ஜசீம் (25), ரம்ஷத் நகீலன் என்ற ஆமு (24) ஆகியோரை தேசிய புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.