பணமோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் பச்சமுத்து தனக்கு விதிக்கப்பட்ட முன்ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரிய மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சினிமா பைனான்சியர் முகுந்சந்த் போத்ராவிடம், வேந்தர் மூவீஸ் நிர்வாகி மதன் மற்றும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து ஆகியோர் ரூ.7 கோடி வரை பணம் பெற்றதாக கூறப்படுகிறது. மதன் மாயமான பிறகு இந்த தொகையை திருப்பித்தரும்படி பச்சமுத்துவிடம் போத்ரா முறையிட்டுள்ளார். ஆனால் பணத்தை திருப்பித்தராத நிலையில், கடந்த ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் 2 பேர் தனது வீட்டுக்கு வந்து பச்சமுத்துவின் பெயரைச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்ததாக போத்ரா தேனாம்பேட்டை போலீஸில் புகார் செய்தார். இந்த வழக்கில் தினமும் மாலை 5.30 மணிக்கு தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி பச்சமுத்து கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் மாவட்ட முதன்மை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி கடந்த மாதம் 9-ம் தேதி உத்தர விட்டது.
இந்நிலையில், இந்த நிபந்தனையை தளர்த்தக்கோரி பச்சமுத்து தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி பஷீர்அகமது முன்பு நடந்தது. அப்போது அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதால், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஏற்கெனவே மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறி மதன் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள பச்சமுத்து, தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார். இந்த ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரிய மனுவும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தி்ல் கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணை தள்ளிவைப்பு
இதேபோல் சென்னை சூளையைச் சேர்ந்த மோகன்குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பச்சமுத்து மற்றும் அவரது ஆடிட்டர் சுப்ரமணியன் மீது வேப்பேரி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விசாரணை தற்போது மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் கைது செய்யப்படலாம் என்பதால், தனக்கு முன்ஜாமீன் கோரி பச்சமுத்து தாக்கல் செய்த மனு மீதான விசாரணையும் இதே நீதிமன்றத்தில் நடந்தது. மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி பஷீர்அகமது, விசாரணையை அக்டோபர் 7-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.