தமிழகம்

கச்சத்தீவை மீட்க தமிழக முதல்வருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு

செய்திப்பிரிவு

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆதரவு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள பத்திரிகையாளர் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும், யாழ்ப்பாணம் முன்னாள் எம்.பி.யுமான சிவாஜிலிங்கம், முதல்வர் ஜெயலலிதாவுக்கு செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதம் குறித்து கூறியது:

இலங்கையில் உள்நாட்டுப் போர் 2009-ல் முடிவுக்கு வந்த பின், தமிழகத்தில் 2011-ல் முதல்வர் பதவிக்கு வந்த தாங்கள், இலங்கைத் தமிழருக்கு விடிவெள்ளி யாக உதயமாவதாக எண்ணி மகிழ்ச்சி அடைந்தோம்.

மேலும், மக்களவைத் தேர்தலில் இந்தியாவிலேயே 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்திருப்பதன் மூலம் தங்களின் ஆளுமை இந்திய அரசியலில் ஒரு சகாப்தமாக உருப்பெற்றுள்ளது. தங்களுக்கும், தங்கள் கட்சிக்கும் கிடைத்த மகத்தான அந்த வெற்றி தமிழகத்துக்கும், இந்தியாவுக்குமான முன்னேற்றத்துக்கு மாத்திரமல்ல, இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் விடுதலை கிடைக்கும் என்ற பெரிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற தங்களின் குரலை, நாங்கள் ஆதரிக்கிறோம். கச்சத்தீவு தமிழர்களின் சொத்து. தமிழகத்தின் சொத்து. இந்தியாவின் சொத்து. எனவே, தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளைத் தீர்ப்ப தோடு, இலங்கைத் தமிழ் மீனவர்களின் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க வேண்டும் என அதில் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மீனவப் பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்பதே சரியான தீர்வாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா செவ் வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT