வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''நாட்டின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே 3-வது வாரத்தில் இந்திய தென்கிழக்கு தீபகர்ப்பத்தில் (தமிழகம்) வடகிழக்கு பருவமழை தொடங்கவும் வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளது. மேலும் அக்.19 அன்று வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவும் வாய்ப்புள்ளது'' என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்குவது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம், ''வடகிழக்கு பருவமழை தொடங்குவதாக இருந்தால், அதற்கு முந்தைய 4 நாட்களில் தினமும் அதிகாலை நேரத்தில் மழை பெய்யும். தற்போது அப்படிபட்ட சூழல் இல்லை. தற்போது பனி பெய்கிறது. அதனால் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 25-க்கு மேல் தான் தொடங்கும் என தெரிகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளது.