தமிழகம்

நீதிமன்றத்தில் எஸ்.ஐ. மீது தாக்கு 8 வழக்கறிஞர்கள் மீது வழக்கு

செய்திப்பிரிவு

நாகர்கோவில் நீதிமன்றத்தில் போலீஸ் எஸ்.ஐ. மற்றும் வழக்கறிஞர்களுக்கு இடையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறு தொடர்பாக 8 வழக்கறிஞர்கள் மற்றும் எஸ்.ஐ. மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் போலீஸ் நிலைய எஸ்.ஐ. சுஜித் ஆனந்த் மீது, மணிக்கட்டி பொட்டலைச் சேர்ந்த வழக்கறிஞர் அழகேசன், நாகர்கோவில் நீதிமன்றத்தில் தனி நபர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை நாகர்கோவில் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜராக வெள்ளிக்கிழமை சாதாரண உடையில் நாகர்கோவில் நீதிமன்றத்துக்கு சுஜித் ஆனந்த் வந்தார். அப்போது, சுஜித் ஆனந்துக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. சுஜித் ஆனந்த் தாக்கப்பட்டார். அவரது துப்பாக்கியையும் வழக்கறிஞர்கள் பறிமுதல் செய்தனர்.

‘தன்னை துப்பாக்கியை காட்டி சுஜித் ஆனந்த் மிரட்டியதாக’ வக்கீல் அழகேசன் மாவட்ட நீதிபதியிடம் புகார் செய்தார். 4 மணி நேரத்துக்கு பின்னர் சுஜித் ஆனந்தை போலீஸார் மீட்டனர்.

‘நீதிமன்றத்தில் ஆஜராக சென்ற தன்னை வழக்கறிஞர்கள் அழகேசன், செல்வக்குமார், அகஸ்தீசன், சிவகோடீஸ்வரன், அருண், ஆதிலிங்கம் உள்ளிட்ட 8 பேர் வழக்கறிஞர்கள் சங்கக் கட்டிடத்துக்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியதோடு, துப்பாக்கி மற்றும் செல்பேசியை பறித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக சுஜித் ஆனந்த் புகார் கொடுத்தார்.

கோட்டாறு போலீஸார் விசாரித்து, கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் 8 வழக்கறிஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் வழக்கறிஞர் அழகேசன் கொடுத்த புகாரின் பேரில், சுஜித் ஆனந்த் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.

SCROLL FOR NEXT