தமிழகம்

ஏழை நோயாளிகளுக்கு அன்போடு சிகிச்சை அளிப்பதுதான் மருத்துவம்: மூத்த டாக்டர் கே.வி.திருவேங்கடம் அறிவுரை

சி.கண்ணன்

அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகளை அலட்சியமாக நடத்தக்கூடாது. அவர்களை நல்லபடியாக கவனிக்க வேண்டும். மரியாதை கொடுத்து அன்போடு சிகிச்சை அளிப்பதுதான் மருத்துவம். இதை அனைத்து டாக்டர்களும் கடைபிடிக்க வேண்டும் என்று நாட்டின் தலைசிறந்த டாக்டர்களில் ஒருவரான கே.வி.திருவேங்கடம் அறிவுரை கூறியுள்ளார்.

மருத்துவத் துறையில் ‘கே.வி.டி’ என்று அனைவராலும் அன்போடும் மரியாதையோடும் அழைக்கப்படுபவர் டாக்டர் கே.வி.திருவேங்கடம். தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்திய அளவில் தலைசிறந்த மூத்த டாக்டர்களில் ஒருவர். பொது மருத்துவம், நுரையீரல், அலர்ஜி, ஆஸ்துமா என பன்முக சிகிச்சை நிபுணராக விளங்குபவர்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் 1950-ம் ஆண்டு படிப்பை முடித்த இவர், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 ஆண்டு காலம் டாக்டராக, பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதன் பிறகு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக கவுரவப் பேராசிரியர், டாக்டராகப் பணியாற்றியுள்ளார்.

அரசு டாக்டராகப் பணியாற்றிய போது, தனது குழுவினருடன் இணைந்து ‘ஐசிஎம்ஆர்’ உதவியுடன் சென்னையில் சிக்குன்குனியா நோயை கண்டுபிடித்துள்ளார். டைபாய்டு காய்ச்சலுக்கு எந்த மாதிரியான மருந்தைக் கொடுக்க வேண்டும் என்பது குறித்து ஆராய்ச்சி செய்தார். மருத்துவம் தொடர்பாக பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்.

இங்கிலாந்து, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளுக்குச் சென்று மருத்துவத்தில் பல நுணுக்கங்களைக் கற்றுத் திரும்பிய இவர், அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகளுக்கு சேவை செய்வதையே உயிர் மூச்சாகக் கொண்டிருந்தார். மருத்துவத் துறையில் சிறந்த சேவை செய்ததற்காக பத்மஸ்ரீ, பி.சி.ராய் விருது, சிறந்த ஆசிரியர் விருது, தன்வந்திரி விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

மருத்துவத் துறையில் ஆழ்ந்த அறிவும், அதிக அனுபவமும் கொண்ட டாக்டர் கே.வி.திருவேங்கடம், இன்றைய மருத்துவத் துறை செயல்பாடுகள் குறித்து ‘தி இந்து’வுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

முன்னேறிய மருத்துவத் துறை

தமிழகத்தில் மருத்துவத் துறை முன்பைவிட நன்றாக இருக்கிறது. நாட்டிலேயே தமிழகத்தில் மருத்துவத் துறை முன்னேறியுள்ளது. முன்பெல்லாம் பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு அமெரிக்கா செல்வார்கள். தற்போது அதை சாதாரணமாக இங்கேயே செய்கின்றனர்.

மருத்துவக் கல்லூரிகளில் திறமையான ஆசிரியர்கள் இருந்தால், மாணவர்களும் திறமையான டாக்டர்களாக வருவார்கள். நான் படித்த காலகட்டத்தில் திறமையான ஆசிரியர்கள் பலர் இருந்தனர்.

தனியார் மருத்துவக் கல்லூரிகள்

தமிழகத்தில் 21 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால் இது மிகவும் குறைவு. 1,000 மக்களுக்கு ஒரு டாக்டர் என்ற வீதம் இருக்க வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. லாப நோக்கமற்ற தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் சென்று பணியாற்றும் டாக்டர்கள் தங்குவதற்கு வீடு உள்ளிட்ட அனைத்து வசதிகளை யும் செய்துதர வேண்டும்.

ஏழைகளுக்கு மரியாதை

அரசு மருத்துவமனையோ, தனியார் மருத்துவமனையோ, திறமையான டாக்டர்கள் இருக்கும் இடத்தில் நல்ல சிகிச்சை கிடைக்கும். பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் திறமையானவர்கள். அதேநேரம், அரசு மருத்துவமனைகளில் ஏழை நோயாளிகளை ஒருசில டாக்டர்கள் அலட்சியமாக நடத்துகின்றனர். நோயாளிகளை அவ்வாறு நடத்தக்கூடாது. ஏழை நோயாளிகள் நம்மை நம்பிதான் வருகின்றனர். அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். நல்லபடியாக கவனிக்க வேண்டும். அவர்களது தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். மரியாதை கொடுத்து அன்போடு சிகிச்சை அளிப்பதுதான் மருத்துவம். இதை அனைத்து டாக்டர்களும் கடைபிடிக்க வேண்டும். ‘நான் மருத்துவம் படித்துவிட்டேன். எனக்கு எல்லாம் தெரியும்’ என்று டாக்டர்கள் நினைக்கக்கூடாது. மருத்துவம் என்பது கடல் மாதிரி. இதில் நமக்கு தெரிந்தது சிறு அளவுதான். இதை டாக்டர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

வணிகமாகும் மருத்துவத் துறை

மருத்துவத் துறை வணிகமாக மாறி வருகிறது. சிலர் பணம் சம்பாதிப்பதற்காக மருத்துவமனை தொடங்குகின்றனர். அரசு டாக்டர்கள் தங்களது பணி நேரத்திலேயே தனியார் மருத்துவமனைக்குச் சென்று வேலை செய்கின்றனர். அதுபோல் செய்யக்கூடாது. இவர்கள் இப்படிச் செய்தால், அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகளுக்கு யார் சிகிச்சை அளிப்பார்கள்.

உயர்வான இந்த மருத்துவத் தொழிலுக்கும், ஏழை நோயாளி களுக்கும் அரசு மருத்துவர்கள் உண்மையாக இருக்க வேண்டியது அவசியம்.

இவ்வாறு டாக்டர் கே.வி.திருவேங்கடம் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT