தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழையின்றி வறண்ட வானிலை நிலவுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. சங்கரன்கோவிலில் 32 மி.மீ., சிவகிரியில் 3 மி.மீ. மழை பதிவானது.
தென்மேற்கு பருவமழையால் மாவட்டத்தில் உள்ள 5 அணைகளும் நிரம்பியிருந்த நிலை யில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணைகளுக்கு நீர் வரத்து குறைந்துவிட்டது.
இதனால் அணைகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 79.60 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 80.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 68.14 அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை, அடவிநயினார் அணை ஆகியவை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளன.
மலைப் பகுதியில் மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைந்து வருகிறது. நேற்று அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது. வழக்கமாக சாரல் சீஸன் காலத்தில் விடுமுறை நாட்களில் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதும். 3 நாட்கள் தொடர் விடுமுறை இருந்தாலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் வழக்கமான அளவிலேயே இருந்தது.