திருப்பத்தூர்: வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி தமிழக பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களை மீட்க பாஜக நடவடிக்கை எடுத்து வருகிறது என நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்ட பாஜக சார்பில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு அறிமுக கூட்டம் திருப்பத்தூரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவர் வீரமணி தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் ரகு வரவேற்றார்.
இதில்,பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத்தலைவரும், நடிகை யுமான காயத்ரி ரகுராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, ‘‘பாஜகவில் இந்த பிரிவை எனக்கு ஒதுக்கியபோது இதர கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒரு பெண் என்றும் பாராமல் என்னை கடுமையாக விமர்சித்தனர்.
அந்தநேரத்தில் எனக்கு உதவ யாரும் முன்வர வில்லை. பாஜகவைச் சேர்ந்தவர்களே எனக்கு உதவ முன் வரவில்லை என்பது தான் உண்மை. தமிழகத்தில் இருந்து பல பெண்களை வெளிநாட்டில் நல்ல வேலை, நல்ல சம்பளம் வாங்கித் தருவதாக கூறி அவர்களை அழைத்துச்சென்று அங்கு இரவு நடன கிளப்புகள் மற்றும் செல்போன் அழைப்புகளில் பேச வைத்து சரியான உணவு கூட வழங்காமல் தமிழக பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.
அப்படி யாராவது பாதிக்கப் பட்டிருந்தால் உறவினர்கள் மூலம் தகவல் தெரிவித்தால் நாங்கள் இந்திய தூதரகம் மூலம் அவர்களை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வருவோம். தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் கம்போடியாவில் இரவு கிளப்புகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன.
மேலும், வெளிநாட்டில் உள்ள தமிழர்களை ஒன்றிணைந்து அவர் களை பாஜகவில் இணைக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.
வெளிநாட்டில் வசிப்பவர்கள் எதிர்காலத்தில் அங்கிருந்தே வாக் களிக்க மத்திய அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மோடி அரசு மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். உலகம் முழுவதும் மோடி அரசு மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நம்பிக்கை வீண்போகாது’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாநில செயலாளர் நித்தியலட்சுமி, மாநில துணைத்தலைவர் ரகுசுப்பிரமணி, மாவட்டச் செயலாளர் பிரவேஷ்ராகுல், கலை மற்றும் இலக்கிய அணி மாநில செயலாளர் ரவிநடராஜ், மாவட்ட துணைத்தலைவர் அன்பழகன், நகரத்தலைவர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.