தமிழகம்

கோவை குறிச்சிக் குளத்தில் பறவைகள் தங்கும் சரணாலயம் ஏற்படுத்தப்படுமா?

எம்.நாகராஜன்

கோவை மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் குறிச்சிக் குளத்தை பறவைகள் சரணாலயமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கோவையில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த குறிச்சிக் குளம் சுமார் 325 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கிடைக்கும் மழை நீரால் நிரம்பி வருகிறது. அதனால், கோவை மாநகர் மட்டுமின்றி கிணத்துக்கடவு வரை நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்திருப்பது சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

எப்போதாவது கிடைக்கும் மழை நீரைக் கொண்டு நிரம்பும் நிலையிலும் இது போன்ற சாத்தியக் கூறுகள் இருக்கும் பட்சத்தில் அடுத்து வரும் வடகிழக்குப் பருவமழையை சேமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆழப்படுத்துவது அவசியம்

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்யும் மழை நீர், சித்திரைச்சாவடி அணை வழியாக குறிச்சியை வந்தடைகிறது. பல ஆண்டுகளாக மழை வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட வண்டல் மண், குளத்தில் நிரம்பியுள்ளது. அதனால், குளத்தின் ஆழம் படிப்படியாகக் குறைந்து, குறைந்த அளவு நீரையே தேக்கி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் அரிதாக கிடைக்கும் மழை நீரையும் அதிக அளவில் தேக்கி வைக்க முடிவதில்லை. இதற்கு குளத்தை ஆழப்படுத்துவது மட்டுமே தீர்வு.

இந்த நிலையை மாற்ற பொதுப்பணித் துறையும், குறிச்சிக் குளம் பாதுகாப்பு அறக்கட்டளையும் தனித்தனியே திட்டமிட்டு வருகின்றன. அதன்படி, பொதுப்பணித் துறையின் ஓய்வு பெற்ற பொறியாளர், குறிச்சிக் குளத்தை ஆய்வு செய்து சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளார். அதேபோல், சேலத்தில் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் முயற்சியைப்போல பறவைகள் சரணாலயமாக மாற்றத் தேவையான திட்டங்களை முன் வைக்கும் அறிக்கையை பொதுப்பணித் துறையும் மாவட்ட நிர்வாகத்துக்கு அளிக்க இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

குளத்தில் கழிவு நீர்

இதுகுறித்து குறிச்சிக் குளம் பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகி சாமிநாதன் ‘தி இந்து’-விடம் கூறியதாவது:

கோவை மக்களின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக குறிச்சிக் குளம் உள்ளது. இதனை எதிர்கால தலைமுறையினருக்கு விட்டுச் செல்வது அனைவரது கடமை. பல ஆண்டுகளாக அடித்து வரப்பட்டுள்ள வண்டல் மண்ணை அகற்றி குளத்தை ஆழப்படுத்த வேண்டும்.

மாநகராட்சியில் 13 இடங்களில் இருந்து சாக்கடை கால்வாய் மூலம் கழிவு நீர் குளத்துக்கு திருப்பி விடுவதை தடுக்க வேண்டும். சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து, அதில் சுத்திகரிக்கப்பட்ட பின்பு குளத்துக்கு திருப்பிவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டத்தை அரசு நினைத்தால் மட்டுமே செயல்படுத்த முடியும்.

குளத்தை காக்கும் நடவடிக்கையில் ஒரு முயற்சியாக கழிவு நீர் வாய்க்கால்கள் குளத்தை வந்தடையும் இடங்களில் முதல் கட்டமாக கழிவு நீர் குட்டைகளை ஏற்படுத்தவும், அதில் கழிவு நீரை உறிஞ்சும் தாவரங்களை வளர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் குளத்துக்கு வருவது ஓரளவு தடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

இதேபோல, சித்திரைச்சா வடியில் இருந்து நொய்யலில் சாக்கடை கால்வாய் கலக்கும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கெல்லாம் சாக்கடை குட்டைகள் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அண்மையில் பொதுப் பணித்துறையின் ஓய்வு பெற்ற பொறியாளர் திருநாவுக்கரசு மூலம் குளத்தை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

அதன்படி, குளத்தை ஆழப்படுத்தவும், அதற்கான அளவீடுகளை கல்லூரி மாணவர்கள் மூலம் மேற்கொள்ள இருக்கிறோம். இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம் என்றார் அவர்.

வண்டல் மண் தீவுகள்

பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் குமாரசாமி கூறியதாவது: குறிச்சிக்குளம் கடந்த ஆண்டு 85 சதவீதமும், அதற்கு முந்தைய ஆண்டு 90 சதவீதமும் நிரம்பியது. ஆயக்கட்டு பரப்பு இல்லாததால், குளத்தில் தேங்கும் நீரால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து சுற்று வட்டார மக்களுக்குப் பயன்படுகிறது.

அண்மையில் நடத்திய ஆய்வில், குளத்தில் 2 அடி ஆழம் வரை வண்டல் மண் எடுக்கவும், அதன் மூலம் 3 லட்சம் கன மீட்டர் மண் அப்புறப்படுத்தலாம் எனவும் தெரியவந்துள்ளது. இந்த மண்ணை வெளியே கொட்டாமல் குளத்தில் ஆங்காங்கே கொட்டி மேடான பகுதியாக மாற்றலாம். அதில், மரக் கன்றுகளை நடுவதன் மூலம் எதிர்காலத்தில் குளத்தில் பல தீவுகள் இருப்பது போன்ற நிலை உருவாகும். அத்தகைய சூழலில் ஏராளமான பறவைகள் தங்கும் சரணாலயம் உருவாகும். குளத்தில் இருந்து எடுக்கப்படும் மண்ணும் குளத்திலேயே சேமிக்கப்படும் நிலையும் ஏற்படும். இதற்கான திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அறிக்கை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

குளம் தூர் வாருதல் உள்ளிட்ட மேம்பாட்டு நடவடிக்கைகள் பொதுப்பணித் துறை வசமிருந்து மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பாக குறிச்சிக் குளத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SCROLL FOR NEXT