தமிழகம்

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி விலை உயர்வுக்கு ராமதாஸ் கண்டனம்

செய்திப்பிரிவு

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள மக்களுக்கு வழங்குவதற்கான அரிசியின் விலையை மத்திய அரசு மும்மடங்கு உயர்த்தியிருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத் தின்படி அனைவருக்கும் உணவு தானியங்கள் வழங்குவதற்கு மாற்றாக ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உணவு தானியத்தை பறிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. அடித்தட்டு மக்களின் தேவைகள், விலைவாசி ஆகியவை குறித்து உண்மைகளை அறியாமல் எந்திரத்தனமாக மத்திய அரசு முடிவெடுத்து திட்டத்தை செயல்படுத்துவது கண்டிக்கத்தக்கது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள மக்களுக்கு வழங்குவதற்கான அரிசியின் விலையை மும்மடங்கு உயர்த்தியிருப்பதுதான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 2.03 கோடி குடும்ப அட்டைகளில் 1.91 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரிசியை வெவ்வேறு விலைகளில் மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு வாங்கி வருகிறது. அந்தியோதயா அன்னயோஜனா எனப்படும் பரம ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு கிலோ அரிசி ரூ.3-க்கும், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கான அரிசியை கிலோ ரூ.5.65-க்கும், வறுமைக்கோட்டுக்கு மேல் வாழும் மக்களுக்கான அரிசியை கிலோ ரூ.8.30-க்கும் தமிழக அரசு வாங்கி வருகிறது.

இதில் வறுமைக்கோட்டுக்கு மேல் வாழும் மக்களுக்கான அரிசியின் விலையை கிலோ ரூ.22.54 ஆக மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது. இந்த ஆணையால் தமிழகத்தில் பொது வழங்கல் திட்டம் கடுமையாக பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் 2.96 லட்சம் டன் அரிசி நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. இதில் 1.26 லட்சம் டன் அரிசி வறுமைக் கோட்டுக்கு மேல் வாழும் மக்களுக்கு வழங் கப்படுகிறது. இதற்கான விலை ரூ.22.54 உயர்த்தப்பட்டிருப்பதால் மாதத்துக்கு ரூ.177 கோடி வீதம் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 134 கோடி கூடுதலாக செல வாகும். தமிழகத்தில் அரிசிக்காக ரூ.3 ஆயிரத்து 458 கோடி உட்பட பொதுவழங்கல் திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.5 ஆயிரத்து 300 கோடி மானியம் வழங்கப்படுகிறது. இத்துடன் கூடுதலாக ரூ.2 ஆயிரத்து 134 கோடி ஒதுக்குவது சாத்தியமில்லை. அவ்வாறு ஒதுக்காவிட்டால் பொது விநியோகத் திட்டமே முடங்கி விடக்கூடும்.

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் தொடர்பான மத்திய அரசின் நிபந்தனைகளை தமிழக அரசு ஏற்கவில்லை என்பதால் தமிழக மக்களை பழிவாங்கும் நோக்குடன் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT