தமிழகம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வழக்கமாக வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 3-ம் வாரத்தில் தொடங்க வேண்டும், ஆனால் அதற்குச் சாதகமான சூழ்நிலை இல்லாததால் சற்றே தாமதமடைந்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியிருப்பதாவது:

ஈரப்பதம் நிறைந்த கிழக்கு திசைக் காற்று தென்னிந்திய பகுதியில் பரவியுள்ளதால் மழை பெய்துள்ளது. இதன் மூலம் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தற்போது தொடங்கியுள்ள மிதமான மழை அடுத்த 48 மணி நேரத்திற்கும் பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் அதிகபட்சமாக 7 செ.மீ. மழை பெய்துள்ளது. தொழுதூர், வலங்கைமானில் தலா 6 செமீ மழையும் பெய்துள்ளது.

மேலும் சென்னை, ஜெயங்கொண்டம், முசிறி, மயிலாடுதுறை, வேதாராண்யம், கந்தர்வக்கோட்டை ஆகிய பகுதிகளில் 4 செமீ மழையும் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு சராசரி மழை அளவான 44 செமீ வரை இயல்பான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT