தமிழகம்

ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி மூலம் ரூ.384 கோடி வரி ஏய்ப்பு: வணிக வரி ஆணையர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: கடந்த இரண்டரை மாதங்களில் ஜிஎஸ்டி உள்ளீட்டு வரியை பயன்படுத்திக் கொண்டு ரூ.383.87கோடி வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டு, அதில் ரூ.33.67 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக வணிக வரி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வணிகவரி ஆணையரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) சட்டத்தின்கீழ் வணிகர்கள் தாக்கல் செய்த ஒரு நிதியாண்டுக்கான மாதாந்திர கணக்குகளை ஆய்வுசெய்ததில், ஒரு பகுதி வணிகர்கள் உள்ளீட்டு வரியை பயன்படுத்திய பின், அதை பணமாகசெலுத்தாததும், ரூ.1,000-க்குகுறைவான வரியை செலுத்துவதும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு வரி ஏதும் செலுத்தாமலும், குறைவாக வரிசெலுத்தியதற்கான காரணத்தை உறுதிசெய்து கொள்ளவும், அவ்வணிகர்களின் பரிவர்த்தனைகளின் உண்மை நிலையை அறிந்து கொள்ளவும், வரி ஏய்ப்பு இருப்பதை உறுதி செய்யவும் 368 வணிகர்களின் இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ரூ.383.87 கோடி வரி ஏய்ப்பு

இந்த ஆய்வின் அடிப்படையில் கடந்த ஜூன், ஜூலை, மற்றும் ஆகஸ்ட் 15 வரை, ரூ.383.87 கோடி வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டு, அதில் ரூ.33.67 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், 31 இனங்களில் போலி பட்டியல் வணிகர்கள் கண்டறியப்பட்டு அதன் மூலம் பலனடைந்த வணிகர்களின் ரூ.57.21 கோடிக்கான உள்ளீீட்டு வரி பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

SCROLL FOR NEXT