தண்ணீர் லாரி மோதி 3 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னையில் அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி மோதியதில் கல்லூரி மாணவிகள் 3 பேர் நேற்று முன்தினம் பலியானார்கள். 4 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து பத்திரிகைகளில் வந்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோர் தண்ணீர் லாரி மோதி ஏற்பட்ட விபத்து குறித்து விரிவான அறிக்கையை நான்கு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், தண்ணீர் லாரிகளுக்கு தகுதிச் சான்று அளிப்பது குறித்த விதிமுறைகள், அனுமதிக்கப்பட்ட நடைகளின் எண்ணிக்கை, கடந்த 5 ஆண்டுகளில் இதுபோன்ற விபத்துகளால் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்ற விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் தவறு செய்யும் ஓட்டுநர்கள், அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆணையத் திடம் தெரிவிக்க வேண்டும்.
மோட்டார் வாகன சட்டப்படி விபத்து ஏற்படுத்துவோரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதை தமிழக அதிகாரிகள் கண்டிப்புடன் அமல்படுத்துவதில்லை. அதிகாரிகளின் கவனக்குறைவு காரண மாகத்தான் அப்பாவி பொதுமக்கள் சாலைகளில் ஆபத்துகளை சந்திக்க வேண்டியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பே அரசின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். தடுக்கப்படக்கூடிய விபத்துகளில் இருந்து மக்களை காப்பாற்றும் கடமை யில் இருந்து மாநில அரசு தப்பிக்க முடியாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி நிர்வாகம் ரூ.6 லட்சம் நிதியுதவி
சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வந்த திருவொற்றியூரைச் சேர்ந்த எஸ்.சித்ரா, புளியந்தோப்பு ஆஷா ஸ்ருதி, பல்லாவரம் எம்.காயத்ரி ஆகிய 3 மாணவிகள் நேற்றுமுன்தினம் மதியம் கல்லூரிக்குச் சென்றனர். கிண்டி மேம்பால சுரங்கப்பாதை அருகே சென்ற போது அதிவேகமாக வந்த சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி மாணவிகள் மீது மோதிய விபத்தில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
செல்லம்மாள் கல்லூரி பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்குச் சொந் தமானது. இந்நிலையில், இந்த அறக்கட்டளையின் தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள், கல்லூரி முதல்வர் வி.ஜி.விஜயலஷ்மி ஆகியோர் நேற்று இறந்த மாணவிகளின் வீட்டுக்குச் சென்று பச்சையப்பன் அறக்கட்டளையில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினர். மேலும், இறந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு அவர்கள் ஆறுதல் கூறினர்.