தமிழகம்

புதுச்சேரி | பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டும் பள்ளி மாணவர்கள் - பெற்றோருக்கே அபராதம், தண்டனை

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக 18 வயதுக் குட்பட்டோர் வாகனங்களை இயக்கினால் பெற்றோரோ, வாகன உரிமையாளரோ ரூ.25 ஆயிரம் அபராதம், சிறை தண்டனை உள்ளிட்டவற்றை அனுபவிக்க வேண்டிய சூழல் உருவாகும்.

சிறார்கள் வாகனங்களை இயக்குவது அவர்களின் சொந்தப் பாதுகாப்பு மற்றும் பிற சாலைப் பயணிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத் தலாக உள்ளது. பள்ளிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, சமீப காலமாக இருசக்கர வாகனங்களில் செல்லும்மாணவர்கள் பலர் விபத்துக்குள் ளானதாக போலீஸார் தெரிவித் தனர்.

இதுதொடர்பாக நகரிலுள்ள முக்கிய பள்ளியின் தலைமையாசி ரியர் கூறுகையில், “பள்ளிக்கு பைக்கில் வர தடை செய்துள்ளோம். ஆனாலும் பலர் சற்று தொலைவில் பைக்கை நிறுத்திவிட்டு பள்ளிக்கு வருகின்றனர். இதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியம். அதிக சிசி கொண்ட பைக்குகளை அவர்களே வாங்கித் தரும் போக்கு நிலவுகிறது” என்று குறிப்பிட்டார்.

போக்குவரத்து காவல்துறை அதிகாரியொருவர் கூறுகையில், “இருசக்கர வாகனத்தில் செல்லும் சிறு குழந்தையை பிடிக்கும்போது சட்டத்தை அமல்படுத்துவதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

முதலில், மாணவர்கள் பீதியடைந்து, விபத்துக்குள்ளாகும் சூழ்நிலையை தவிர்க்க வேண்டிய நிலையிலும் உள்ளோம். காரைக்காலில் 18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு தனது வாகனத்தை ஒட்ட அனுமதியளித்த குற்றத்துக்காக மூன்று வழக்குகளில் சம்பந்தப்பட்ட சிறாரின் பெற்றோர் மற்றும் வாகன உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும், ஒரு நாள் சிறைத் தண்டனையும் காரைக்கால் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

சிறார் ஏற்படுத்தும் வாகன விபத்துக்கு எவ்வித விபத்து காப்பீடும் கிடைக்காது. அதற்கும் சிறாரின் பெற்றோர்தான் பொறுப்பு. அதனால் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு வாகனத்தை தர வேண்டாம்” என்றார்.

டிஜிபி மனோஜ்குமார் லால் போக்குவரத்து விதிகளை அமல்படுத்தவும், போக்குவரத்தை சீரமைக்கவும் அதிக முக்கியத்துவம் தர உத்தரவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து போக்குவரத்து காவல்துறை அதிகாரி கள் விழிப்புணர்வை தொடங்கி யுள்ளனர்.

பெற்றோர் கவனத்துக்கு..

இதுதொடர்பாக காவல்துறை எஸ்எஸ்பி நாரா சைதன்யா கூறுகையில், “மாணவர்களிடையே நடத்தை மாற்றத்தை கொண்டு வர பார்க்கிறோம். ஆனால் அதே நேரத்தில் பெற்றோரை பொறுப் புக்குள்ளாகும் சட்டத்தையும் மிக கடுமையாக அமல்படுத்துவோம். சட்டத்தை அமல்படுத்த இனி பள்ளி நேரங்களில் முக்கிய இடங்களில் போலீஸாரை நிறுத்த உள்ளோம்.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் குறைந்த வயதில் வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளோம். இதுபோன்ற மீறல்கள் சிறு குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உள்ளடக்கியது.

மோட்டார் வாகனச் சட்டத்தில், வாகனத்தின் உரிமையாளருக்கு வழங்கக்கூடிய தண்டனை மிகவும் தெளிவாக உள்ளது. அதன்படி, குழந்தைகள் குற்றவாளிகளாக இருந்தால், பெற்றோர் தண்டிக்கப் படுவார்கள். சட்டத்தின் பிரிவு 4-ல் 18 வயதுக்குட்பட்ட எந்தவொரு நபரும் பொது இடத்தில் மோட்டார் வாகனம் ஓட்டுவதை சட்டப்பூர்வமாக தடுக்கிறது.

சட்டத்தின் 180-வது பிரிவில், அங்கீகரிக்கப்படாத நபர்களை வாகனம் ஓட்ட அனுமதிப்பது சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது” என்றார். அண்மையில் விருத்தாசலத்தில் 13 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதி சிறுமி உயிரிழந் ததையடுத்து அந்த சிறுவனுடன், தந்தையும் கைதான சம்பவத்தால், புதுச்சேரியிலும் போலீஸார் கண்காணிப்பை அதிகப்படுத்த தொடங்கியுள்ளனர்.

SCROLL FOR NEXT