நலிவடைந்தோர் பயன்பெறும் வகையில் கல்வி ஊக்கத்தொகை யுடன் கூடிய ‘ஆம் ஆத்மி பீமா யோஜனா’ காப்பீட்டு திட்டத்தை எல்ஐசி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் இந்த ஆண்டுக்குள் 15 லட்சம் பேரை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் எல்ஐசி நிறு வனத்தின் மண்டல மேலாளர் ஆர்.தாமோதரன் நேற்று கூறிய தாவது:
எல்ஐசி நிறுவனம் நம் நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும் பாகத் திகழ்கிறது. குறிப்பாக, நலிவடைந்த பிரிவினருக்குப் பல்வேறு உதவிகளை செய்து வரு கிறது. ஆயுள் காப்பீட்டு பயன்கள் நலிவடைந்த, பொருளாதார அடிப் படையில் பின்தங்கிய மக்களைச் சென்றடையும் வகையில் காந்தியடி கள் பிறந்த அக்டோபர் மாதத்தை ஆண்டுதோறும் சமூக பாதுகாப்பு மாதமாக கொண்டாடுகிறோம்.
அடித்தட்டு மக்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் எல்ஐசி பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கல்வி ஊக்கத்தொகை பலனோடு கூடிய ‘ஆம் ஆத்மி பீமா யோஜனா’ என்ற காப்பீட்டு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். இதன் கீழ், இயற்கை மரணத்துக்கு ரூ.30 ஆயிரம், விபத்து மூலம் இறந்தால் ரூ.75 ஆயிரம், நிரந்தர உறுப்பு செயலிழப்புக்கு ரூ.75 ஆயிரம், பகுதி செயலிழப்புக்கு ரூ.37,500 வழங்கப்படும்.
இதற்கான வருடாந்திர பிரீமியத் தொகை ரூ.200 மட்டுமே. அதிலும், ரூ.100-ஐ மட்டும் காப்பீட்டுதாரர் வழங்கினால் போதும், எஞ்சிய தொகை ரூ.100 -ஐ மத்திய அரசின் சமுதாய பாதுகாப்பு நிதியில் இருந்து எல்ஐசி நிறுவனம் வழங்கும். மேலும், இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.1,200 கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 20 லட்சம் மாணவர்களும், நாடு முழுவதும் 5 கோடி மாணவர்களும் கடந்த ஆண்டில் கல்வி ஊக்கத்தொகை பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் தென் மண்டலத்தில் 15 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 6 லட்சம் பேரை இந்த மாதத்தில் சேர்க்க வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறோம்.
எல்ஐசியின் பொன்விழா ஆண்டு நிதியில் இருந்து முதியோர் இல்லம், பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட வற்றை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். மண்டல மேலாளர்கள் என்.பிரபாகர் ராவ், முரளிதரன் மற்றும் ஆர்.துரைசாமி ஆகியோர் உடனிருந்தனர்.