தமிழகம்

அதிமுக பொதுக்குழு வழக்கு: இபிஎஸ் தரப்பு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் இன்று (ஆக.18) முறையீடு செய்யப்பட்டது.

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், "கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது.

அதிமுகவில் கடந்த ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்" என்று தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல் முறையீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், துரைசாமி மற்றும் சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண் மேல் முறையீடு செய்தார்.

"அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும், அந்த மேல்முறையீட்டு மனுவை திங்கட்கிழமை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று முறையிட்டார்.

"மனுவிற்கு எண்ணிடும் நடைமுறை முடிந்தால், திங்கட்கிழமை இந்த மனு விசாரணைக்குப் பட்டியலிடப்படும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT