தமிழகம்

அணில்காடு கிராமத்துக்கு மின்சார வசதி: இருளிலிருந்து வெளிச்சத்துக்கு வந்ததாக பழங்குடியின மக்கள் உற்சாகம்

ஆர்.டி.சிவசங்கர்

கோத்தகிரியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அணில்காடு பழங்குடியின கிராமம். இங்கு 7 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு மின்சார வசதி செய்து தரக்கோரி, பல ஆண்டுகளாக தொடர்புடைய அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் மனு அளித்து வந்தனர்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், நீலகிரி மாவட்ட வன அலுவலர் சச்சின் போஸ்லே துக்காராம் ஆகியோரின் பரிந்துரைப்படி, அணில்காடு கிராமத்துக்கு மின்இணைப்பு வழங்க ரூ.1 லட்சத்து 76 ஆயிரத்து 843-ஐஅரசு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த 16-ம் தேதிகுன்னூர் சார்ஆட்சியர் தீபனா விஸ்வேஸ்வரி, கோத்தகிரி வட்டாட்சியர் காயத்ரி, கொணவக்கரை ஊராட்சித் தலைவர் ஜெயபிரியா ஹரிகரன், கோத்தகிரி மின்வாரிய உதவிப் பொறியாளர்கள் மாதன், கமல்குமார் ஆகியோர் மின் இணைப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் கூறும்போது, ‘‘அடர்ந்த வனப்பகுதியில் அணில்காடு உள்ளதால், இந்த கிராமத்துக்கு மின்சாரக் கம்பிகளை எடுத்துச் செல்வதில் பல்வேறு இடர்பாடுகள் இருந்தன. வருவாய், உள்ளாட்சி, வனம் மற்றும் மின்சாரத் துறை ஆகிய துறைகளை சார்ந்த உயர்அலுவலர்களின் சீரிய முயற்சியால், இடர்பாடுகள் களையப்பட்டு, மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

அணில்காடு குக்கிராமத்தில் உள்ள 7 குடும்பங்களில் ஹாலம்மாள் என்பவரின் வீட்டுக்கு மட்டும்தற்போது மின்சார இணைப்பு வழங்கப்பட்டு, அங்கு மின்விளக்குபொருத்தப்பட்டது. மீதமுள்ள 6 குடும்பங்களுக்கும் விரைவில் மின்சார இணைப்பு வழங்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிராம மக்கள் கூறும்போது, ‘‘சுதந்திரம் பெற்று 75-வது ஆண்டை கொண்டாடும் நேரத்தில், இருளிலிருந்து வெளிச்சத்துக்கு வந்துள்ளோம். மின்இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்த அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி,’’ என்றனர்.

SCROLL FOR NEXT