தமிழகம்

38 நாட்களுக்குப் பின்னர் ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி

செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் நேற்று முதல் அனுமதி வழங்கியுள்ளது.

பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக, கடந்த மாதம் 10-ம் தேதி மதியம் முதல் ஒகேனக்கல் பிரதான அருவி, காவிரியாறு ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும், கால்நடைகளை ஆற்றைக் கடந்து அழைத்துச் செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. மறு உத்தரவு வரும்வரை இந்த தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

மேலும், பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை நுழைவு வாயில் மூடப்பட்டது.

வெள்ளப் பெருக்கு

அடுத்த சில நாட்களில் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்து வெள்ளப்பெருக்காக மாறியது. விநாடிக்கு 2 லட்சம் கனஅடியைக் கடந்து காவிரியாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடத் தொடங்கியது.

எனவே, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தடையுத்தரவை தொடர்ந்து பின்பற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

நீர்வரத்து சரிவு

கடந்த சில நாட்களாக நீர்வரத்து படிப்படியாகக் குறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் காலையில் விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து அன்று மாலை விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாகக் குறைந்தது. நேற்று காலை விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாகக் குறைந்தது.

எனவே, ஒகேனக்கல் சுற்றுலாவை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

பரிசல் இயக்க அனுமதி

இந்நிலையில், 38 நாட்களுக்குப் பின்னர் நேற்று காலை முதல் ஒகேனக்கல் காவிரியாற்றில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் அரசு நிபந்தனைகளுக்கு உட் பட்டு பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், ஆற்றிலும், பிரதான அருவி, சினி பால்ஸ் அருவி உள்ளிட்ட இடங்களிலும் குளிக்க அனுமதி அளிக்கவில்லை.

வெள்ளப்பெருக்கின்போது ஆற்றில் அடித்து வரப்பட்ட குப்பை, மரக்கிளைகள், பழைய துணிகள் போன்றவை பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதை உள்ளிட்ட இடங்களில் குவிந்து கிடக்கின்றன.

பாதுகாப்பு தடுப்புகள் சேதம்

மேலும், பிரதான அருவி அருகிலும், பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதையின் இரு ஓரங்களிலும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு தடுப்புகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளன. எனவே, பாதுகாப்பு தடுப்புகளை சீரமைப்பது, தேங்கிக் கிடக்கும் குப்பை, மரக்கிளைகள் ஆகியவற்றை அகற்றுவது போன்ற பணிகளுக்குப் பின்னர் அருவி மற்றும் ஆற்றில் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

ஒகேனக்கல்லுக்கு நேற்று சுற்றுலா வந்தவர்கள், பரிசல் பயணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் உற்சாகம் அடைந்தனர். காவிரியாற்றின் பல்வேறு பகுதிகளுக்கு பரிசலில் பயணித்து ஆற்றின் அழகை ரசித்தனர்.

SCROLL FOR NEXT