சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 89-வது பிறந்த நாளையொட்டி, டெல்லியில் அவரது படத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். டெல்லில் நேற்று குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், பிரதமர் ஆகியோரை சந்தித்தார்.
முன்னதாக, முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 89- வது பிறந்த தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அண்ணா-கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு, முதல்வர் ஸ்டாலின் மலர்கள் தூவி, மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், டி.ஆர்.பாலு, கனிமொழி, அ.ராசா உள்ளிட்ட எம்.பி.க்கள், டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், முரசொலி மாறன் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் தனது ட்விட்டர் பதிவில், ‘‘கருணாநிதியின் மனசாட்சியாக விளங்கிய, திராவிட அரசியலின் அறிவுப் பெட்டகம் முரசொலி மாறன் பிறந்த நாளில், அவரை நினைவுகூர்ந்து தமிழகத்தை வளப்படுத்த உறுதியேற்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.
சோனியாவிடம் நலம் விசாரிப்பு
டெல்லி சென்றுள்ள முதல்வர், கரோனா காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் பிறந்த நாளையொட்டி, டெல்லியில் உள்ள அண்ணா - கலைஞர் அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு நேற்று மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏகேஎஸ்.விஜயன் உள்ளிட்டோர்.