சென்னை: சென்னை வானகரத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் கடந்த ஜூலை 11-ம் தேதி சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் அவர் கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கடந்த ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது பழனிசாமி தரப்புக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. தீர்ப்பு விவரம் வெளியானவுடன், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லம் முன்பு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூடி, தீர்ப்பை வரவேற்று உற்சாக நடனமாடினர்.
அதே சாலையில் உள்ள பழனிசாமியின் இல்லத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, சி.விஜயபாஸ்கர், டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.சி.சம்பத், கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் தமிழ்மகன் உசேன், கட்சி தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம் உள்ளிட்டோர் நேரில் சென்று, அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
மேலும், நேற்று மாலை நடைபெற்ற ஆலோசனையில், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வளர்மதி, பா.பெஞ்சமின் கலந்துகொண்டனர். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ஜூன் 23 மற்றும் ஜூலை 11-ம் தேதிகளில் நடைபெற்ற செயற்குழு மற்றும் பொதுக்குழு என்பது, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நடத்தியது போன்றே நடத்தப்பட்டுள்ளது.
முதல் பொதுக்குழுவில் பங்கேற்ற அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும், 23 தீர்மானங்களை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றினர். அதேபோல, 2-வது பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களையும் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் முழுமனதாக ஏற்றுக் கொண்டனர்.
ஓபிஎஸ் தரப்பினர் 100 பொதுக்குழு உறுப்பினர்களை வைத்துக்கொண்டு, நீதிமன்றம் சென்றுகொண்டு இருக்கிறார்கள். தீர்ப்பின் முழு விவரம் கிடைத்த பிறகு, முழுமையான விவரங்கள் தலைமை அலுவலகம் மூலமாகத் தெரிவிக்கப்படும். இந்த தீர்ப்பு பழனிசாமிக்கு பின்னடைவை ஏற்படுத்தவில்லை'' என்றார்.