தமிழகம்

திருமூர்த்தி அணையில் 10 ஆண்டுகளாக முடங்கிய படகுத்துறை: வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மலைவாழ் மக்கள்

எம்.நாகராஜன்

உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் பத்து ஆண்டுகளாக செயல்படாத படகுத்துறையால், மலைவாழ் மக்கள் வருவாய் இன்றி தவித்து வருகின்றனர்.

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை பகுதியையொட்டி சுமார் 500-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றன. விறகு, நெல்லி, ஊறுகாய், இலந்தை வடை விற்பது இவர்களின் பிரதான தொழில். விசேஷ தினத்தன்று திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வருகையை பொறுத்தே, இப்பகுதி மக்களின் வருமானம் இருக்கும்.

இந்நிலையில் மலைவாழ் பெண்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் திருமூர்த்தி அணையில் படகுத்துறை அமைத்து படகு சவாரியை நடத்திக் கொள்ள அரசு அனுமதியளித்தது. கடந்த 1996-ம் ஆண்டுமுதல் தளி பேரூராட்சி சார்பில் இரு படகுகள் வாங்கப்பட்டு, மலைவாழ் பெண்கள் சுய உதவிக்குழுக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன.

வருவாயில் 25 சதவீதம் பேரூராட்சிக்கும், 75 சதவீதம் சுய உதவிக்குழு பெண்களுக்கும் என்ற விகிதத்தில் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்பது விதி. இதனால் மலைவாழ் பெண்களின் வாழ்வாதாரம் உயர்ந்த நிலையில், பயன்பாட்டில் இருந்த 2 படகுகளும் பழுதடைந்தன.

10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை படகுகளை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

இதுகுறித்து சுய உதவிக்குழு பெண்கள் கூறும்போது, ‘‘படகுத் துறையின் மூலம் ஓரளவுக்கு வருவாய் கிடைத்து வந்தது. படகுகள் வாங்கிய நாள்முதலே இன்ஜினில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வந்தது. சிறு பழுதுகளை நாங்களே சரிசெய்து கொண்டோம். நாளடைவில் படகுகள் முற்றிலும் பழுதாகி, கிடப்பில் போடப்பட்டன.

புதிய படகுகளை வாங்கி எங்களின் வாழ்வாதாரம் மேம்பட தளி பேரூராட்சி நிர்வாகம் உதவவேண்டும்,’’ என்றனர்.

இதுகுறித்து தளி பேரூராட்சி செயல் அலுவலர் கல்பனா கூறும்போது, ‘‘திருமூர்த்தி அணையில் உள்ள பழைய படகுகள் பழுதடைந்துள்ளன. புதிய படகுகளை கொள்முதல் செய்து, அவற்றை மலைவாழ் மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்,’’ என்றார்.

SCROLL FOR NEXT