சென்னை: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சித் தலைவர் தி.வேல்முருகன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச் செயலாளர் சத்ரியன் வேணுகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தி.வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து சமூகத்தினரும் பயன்பெறும் வகையில், தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
இதற்கு மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் மூலம் அனைத்து சமூக மக்களும் சம உரிமை பெற்று சமூகநீதியை நிலைநாட்ட முடியும்.
விமான நிலையங்கள், என்எல்சி, ரயில்வே என அனைத்து துறைகளிலும் பணியாற்றும் வெளி மாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இங்கு தமிழகத்தைச் சேர்ந்த பூர்வகுடி மக்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. இந்த நிலையை மாற்றியமைக்க சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழுவை அமைத்து முறைப்படி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையிலான வாய்ப்புகளை வழங்கினால்தான் இதற்கு தீர்வு காண முடியும்.
தமிழ் சமூகங்களுக்கு இடையே நிலவி வரும் முரண்பாடுகளைக் களைய இது நல்ல வாய்ப்பாக அமையும். தமிழகத்தில் இருக்கும் மத்திய அரசு சார்ந்த வேலை வாய்ப்புகளில் தமிழர்களுக்கு 90 சதவீதம் ஒதுக்கவேண்டும், அதேபோல் மாநில அரசு வேலைகளில் தமிழர்களுக்கு 100 சதவீதம் ஒதுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.