சென்னை: டெல்லியில் உள்ள வேளாண் ஆராய்ச்சி, கல்வி இயக்குநரகத்தின் அனுமதியுடன் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், அமெரிக்காவில் உள்ள ஒக்லஹாமா ஸ்டேட் பல்கலைக்கழகத்துடன் கடந்த 2017-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதன்படி, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிறுவன வளர்ச்சி திட்டத்தின் நிதியுதவியுடன் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 10 இளநிலை மாணவர்கள் கடந்த 2019 நவம்பர் முதல் 2020 ஜனவரி வரை 3 மாதங்களுக்கு ஒக்லஹாமா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பயிற்சிபெற்றுள்ளனர். அதேபோல், அங்கிருந்து 6 மாணவர்கள் 2019 ஜூன், ஜூலையில் 31 நாட்களுக்கு இங்கு வந்து மருத்துவமனைகளில் பயிற்சி பெற்றனர்.
கரோனா பரவலால் இந்த பரிமாற்ற திட்டத்தை தொடர முடியாமல் இருந்தது. இதற்கிடையில் இந்த ஆண்டில் முடிவடைய இருந்த ஒப்பந்தத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, ஒக்லஹாமா ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் கார்லோஸ் ரிஸ்கோ, துணை முதல்வர், ஜெர்ரி ஆர்.மலாயர், இயக்குநர் ஆசிஷ் ரஞ்சன், பேராசிரியர் லயோனல் டாசன் ஆகியோர் அடங்கிய குழு சென்னை வந்தது.
இந்நிலையில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.ந.செல்வக்குமார், ஒக்லஹாமா ஸ்டேட் பல்கலைக்கழக கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் கார்லோஸ் ரிஸ்கோ ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.